Published : 23 Feb 2022 09:10 AM
Last Updated : 23 Feb 2022 09:10 AM
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே மூன்று கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இன்று (பிப்.22) 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் லக்கிம்பூர் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறி விவசாயிகள் பத்திரிகையாளர் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் உ.பி.யில் பாஜக விவசாயிகள் ஆதரவை பெருமளவில் இழந்துவிட்டதாகக் கூறப்பட்டது. மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதும் உ.பி. பஞ்சாப் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு விவசாயிகளை ஆசுவாசப்படுத்தும் முயற்சி என்றே விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 59 தொகுதிகளில் லக்கிபூர் கேரியும் அடக்கம். இதுதவிர தலைநகர் லக்னோ, இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதால் சர்ச்சையில் சிக்கிய உன்னாவ் பகுதி, சோனியா காந்தியின் கோட்டையான் ரே பரேலி, பாஜக எம்.பி. வருண் காந்தியின் தொகுதியான பிலிபிட் என பல முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாயாவதி வாக்களிப்பு: அதிகாலையிலேயே பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி லக்னோ முனிசிபல் நர்சரி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் முஸ்லிம் மக்கள் சமாஜ்வாதிக்கு வாக்களிக்க மாட்டார்கள். சமாஜ்வாதி கட்சியின் மீது அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். சமாஜ்வாதிக்கு வாக்களித்தால் அது குண்டர் ஆட்சி, மாஃபியா ஆட்சிக்கு வழிவகுக்கும் என அவர்களுக்குத் தெரியும். சமாஜ்வாதி ஆட்சியில் தான் மாநிலத்தில் பல கலவரங்கள் நடந்தன. ஆகையால் மீண்டும் அந்த ஆட்சி அமைய மக்கள் விரும்பவில்லை என்றார்.
லக்னோ தொகுதி பாஜக வேட்பாளர் பிரஜேஷ் பதக் , காளி பாரி கோயிலில் வணங்கிவிட்டு வந்து தனது வாக்கை செலுத்தினார். பிரஜேஷை எதிர்த்து சமாஜ்வாதி சார்பில் சுரேந்திரா சிங் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் இருமுறை அத்தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக 5,6,7 ஆம் கட்ட தேர்தல்கள் முறையே பிப்ரவரி 27, மார்ச் 3 மற்றும் 7 தேதிகளில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT