Published : 23 Feb 2022 08:27 AM
Last Updated : 23 Feb 2022 08:27 AM
புதுடெல்லி: தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாதபுதிய கூட்டணி பேசப்படுகிறது. இதன் மீதான ஒரு கேள்வியில் அக்கூட்டணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை ஏற்பாரா? என மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 10 முதல் துவங்கி உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கத் துவங்கி உள்ளார். அதில், தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து அமைக்க முயலும் புதிய கூட்டணி குறித்தும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதில், புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் சிவசேனா கட்சியும் இறங்கியுள்ளதே எனக் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பாஜகவின் முக்கியத் தலைவர் அமித் ஷா கூறும்போது, ‘ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் இதற்கான உரிமை உள்ளது. இதை விரும்புபவர்கள் முயற்சித்து பார்க்கட்டுமே. ஆனால், அதற்கான தலைமை பொறுப்பை ஏற்கப் போவது யார்? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். இதற்கான தலைவராக, மம்தா பானர்ஜி அல்லது சரத் பவார் ஆகியோரில் முன்வருவது யார்?இப்போது தெலங்கானா முதல்வர்சந்திரசேகரராவ் தானே தலைவராக முயல்கிறரா? அல்லது திமுகதலைவர் ஸ்டாலின் தான் இதற்குமுன்வருவாரா? முதலில் அக்கூட்டணிக்கு தலைமை ஏற்பவர் முடிவான பின் அதன் மீது விவாதிக்கலாம்’ எனத் தெரிவித்தார்.
மத்தியில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் அல்லாத ஒரு புதிய கூட்டணி அமைக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. புதிய மூன்றாவது கூட்டணிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முயற்சி எடுத்தார். மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா இதற்காக கடந்த மாதம் பல எதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்தார்.
ஆனால், இதற்கு திமுக உள்ளிட்ட சில முக்கியக் கட்சிகள் உடன்பட்டதாகத் தெரியவில்லை. காங்கிரஸை விலக்கி வைத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கமுடியாது எனும் வகையில் மக்களவையின் திமுக அவைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் கருத்து மட்டும் வெளியானது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் மகாராஷ்டிராவுக்கு சென்றிருந்தார். அங்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசி இருந்தார். இதுவும் பாஜகவுக்கு எதிரானக் கூட்டணி அமைக்க எனப் பேசப்படுகிறது. இதிலும் காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமையாது என்ற கருத்து வெளி யாகி உள்ளது.
காங்கிரஸை தவிர்க்க முடியாது
இதுகுறித்து நேற்று சிவசேனாவின் எம்.பியான சஞ்சய் ரவுத் கூறும்போது, ‘காங்கிரஸ் அல்லாத அணி நிச்சயம் உருவாக்கப்படாது. நாங்கள் ஒருபோதும் காங்கிரஸை தவிர்த்து பாஜக எதிர்ப்பு அணி குறித்து பேசியதில்லை.
மம்தா பானர்ஜி, காங்கிரஸ் அல்லாத கூட்டணி குறித்து பேசியபோது சிவசேனாதான் முதல் கட்சியாக காங்கிரஸுக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருந்தது. தெலங்கானாவின் முதல்வர் சந்திரசேகரராவும் நிச்சயம் அனைவரையும் அரவணைத்து அணியை முன்னெடுத்து செல்வார் எனநம்புகிறோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...