Published : 22 Feb 2022 05:10 AM
Last Updated : 22 Feb 2022 05:10 AM

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட அதிக நிதியை செலவிட்ட 5 மாநிலங்கள்

புதுடெல்லி

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட அதிக நிதியை தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் செலவிட்டுள்ளன.

மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த கரோனா பாதிப்புக்கு முந்தைய 2019-20 நிதியாண்டில் பிஹார் மாநிலம் 3,371 கோடி செலவிட்டது. ஆனால் கரோனா பாதிப்புக்கு பிறகு நடப்பு நிதியாண்டில் ரூ.5,771 கோடியாக அதிகரித்தது.

இதுபோல மத்திய பிரதேசத்தில் செலவிட்ட தொகை ரூ.4,949கோடியிலிருந்து 32 சதவீதம் அதிகரித்து ரூ.7,354 கோடியாகி உள்ளது. ஒடிசாவில் செலவிட்ட தொகை ரூ.2,836 கோடியிலிருந்து ரூ.5,375 கோடியாகவும் மேற்கு வங்கத்தில் ரூ.7,480 கோடியிலிருந்து ரூ.10,118 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

பிஹார், மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் வேலை செய்து வந்தனர். 2020 மார்ச் மாதத்தில் கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலையிழந்து சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில்தான் இந்த மாநிலங்களில் ஊரக வேலை திட்டத்தின் கீழ் செலவிடப்பட்ட தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.5,621 கோடி செலவிடப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.8,961 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் நடப்புநிதியாண்டில் ரூ.73 ஆயிரம் கோடிபட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. எனினும், இதுவரை ரூ.94,994 கோடியை மாநிலங்கள் செலவிட்டுள்ளன. கூடுதல் தொகையை துணை பட்ஜெட் மூலம் மத்தியஅரசு மாநிலங்களுக்கு வழங்கியது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x