Published : 20 Feb 2022 05:23 PM
Last Updated : 20 Feb 2022 05:23 PM
புதுடெல்லி: உக்ரைனில் வசிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அத்தியாவசியமான தேவையில்லாத சூழலில் தாயகம் திரும்புமாறு மத்திய அரசுக் கேட்டுக் கொண்டுள்ளது.
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. அதேவேளையில் உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக் கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்று வருகிறது. இந்தச் சூழலில் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், பெலாரஸ் நாட்டுடன் வழக்கமான போர் உக்தி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும். பயிற்சி ஒரு வாரத்தில் முழுமையாக நிறைவு பெற்றுவிடும். ஏற்கெனவே சில படைகள் திரும்பி வருகின்றன என்று ரஷ்யா கூறியுள்ளது.
ஆனால் அமெரிக்கா இதனை மறுக்கிறது. இவ்விவகாரத்தில் ரஷ்யா பொய் கூறி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்தநேரத்திலும் தாக்குதலை தொடங்கும் ஆபத்து இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் உக்ரைனில் வசிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அத்தியாவசியமானதாக கருதப்படாவிட்டால் தாயகம் திரும்புமாறு மத்திய அரசுக் கேட்டுக் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பு குறித்த பதட்டங்களுக்கு மத்தியில் இந்திய குடிமக்கள் நாட்டிலிருந்து வெளியேற ஏதேனும் வணிக அல்லது வாடகை விமானத்தை தேடுமாறு இந்திய தூதரகம் அறிவுரை கூறியுள்ளது. மாணவர்கள் கூடிய விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது.
"உக்ரைனில் நிலவும் பதட்டங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகள் தொடர்வதைக் கருத்தில் கொண்டு, அங்கு தங்கியிருக்கும் அனைத்து இந்திய நாட்டவர்களும், அனைத்து இந்திய மாணவர்களும் தற்காலிகமாக உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
"இந்திய மாணவர்கள் விமானங்கள் குறித்த புதுப்பிப்புகளுக்கு அந்தந்த மாணவர் ஒப்பந்ததாரர்களுடன் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் எந்தவொரு புதுப்பிப்புக்கும் தூதரக பேஸ்புக், இணையதளம் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்றவும்" என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT