Published : 20 Feb 2022 07:19 AM
Last Updated : 20 Feb 2022 07:19 AM
பஞ்சாபின் 117 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவை தொகுதி களுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. அங்கு முஸ்லிம்கள் மீதான அரசியலை எந்த அரசியல் கட்சிகளும் செய்வது கிடையாது. அங்கு சுமார் 35% இருந்த முஸ்லிம்கள், சுதந்திரத்திற்கு முன்பான பிரிவினையில் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தது இதன் காரணம்.
கடந்த 1454-ல் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளரான ஷேக்சத்ரூத்தீன்-எ-ஜஹான் என்பவரால் மலேர்கோட்லா உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 1657-ல் பயாசித் கான் என்பவரால் தனிமாகாணமாக்கப்பட்டது.
அப்போது சீக்கியர்களின் 10-வது குருவான கோவிந்த்சிங்கின் மகன்களான 9 மற்றும் 7 வயதில் ஜோரோவார்சிங்கும், ஃபதேசிங்கும் இருந்தனர். இவர்களை கொல்ல மலேர்கோட்லாவின் ஆளுநரான சிரிஹிந்த் வஜீர் கான் 1705-ல் உத்தரவிட்டார்.
இவ்வாறு கொல்வது இஸ்லாத்திற்கும், அவர்களது புனிதக் குர்ஆன் கொள்கைக்கும் எதிரானது என மலேர்கோட்லாவின் நவாபாக இருந்த ஷேர் முகம்மது கான் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை குரு கோவிந்த்சிங்கின் சீக்கிய வாரிசுகளை முகம்மது கான் காத்தார். இதன் நன்றிக்கடனாக, பிரிவினையின் கலவரத்தில் மலேர்கோட்லாவின் முஸ்லிம்களை சீக்கியர்கள் காத்ததாக, வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் பிரிவினையின் போது பஞ்சாப் முழுவதிலும் வெடித்த கலவரத்தில் மலேர்கோட்லா அமைதியாக இருந்தது. பஞ்சாபின் முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு சென்றுவிட, மலேர் கோட்லாவினரை மட்டும் இதற்கு சீக்கியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், மலேர்கோட்லாவிற்கு வெளியே இல்லாத முஸ்லிம்கள் மீதான அரசியலை எந்தக் கட்சியினரும் செய்வதில்லை எனக் கருதப்படுகிறது. 80% கொண்ட மலேர்கோட்லாவில் மட்டும் கிராமப் பஞ்சாயத்து முதல் சட்டப்பேரவை தேர்தல் வரை அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களையே போட்டியில் நிறுத்துகின்றனர்.
மலேர்கோட்லாவை தவிர, பஞ்சாபின் வேறு எங்கும் முஸ்லிம்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை. சங்ரூர் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக இருந்த மலேர்கோட்லாவை தனி மாவட்டமாக்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கையாக இருந்தது. இதை தன் தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் 2017-ல் சேர்த்திருந்தது. இதை நிறைவேற்றும் விதத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல்வர் கேப்டன்.அம்ரீந்தர் சிங், மலேர்கோட்லாவை தலை மையிடமாக்கி, அதே பெயரில் புதிய மாவட்டம் அமைத்தார்.
1957 முதல் மலேர்கோட்லாவின் எம்எல்ஏக்களாக முஸ்லிம்களே உள்ளனர். இங்கு மூன்றாம் முறை எம்எல்ஏவும் மாநில அமைச்சருமான ரஸியா சுல்தானா காங்கிரஸுக்காக மீண்டும் போட்டியிடுகிறார். 2002, 2007-ல் பாஜக கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளத்தின் எம்எல்ஏவாக பர்ஸானா ஆலம் இருந்தார்.
இந்தமுறை பர்ஸானா ஆலம், கேப்டன் அம்ரீந்தரின் புதிய கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸில் போட்டியிடுகிறார். தனது எம்எல்ஏவாக 1997-ல் இருந்த நுஸ்ரத் எக்ராம் கான் பக்காவிற்கு அகாலி தளம் மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் முகம்மது ஜமீலுர் ரஹ்மான் போட்டியிடுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT