Published : 19 Feb 2022 08:22 AM
Last Updated : 19 Feb 2022 08:22 AM

லக்கேஜ்ஜை ஒப்படைப்பதில் அலட்சியம்: ஸ்பைஸ்ஜெட் விமான பயணிக்கு ரூ.60 ஆயிரம் வழங்க உத்தரவு

ஹைதராபாத்:கன்ஷாம் தாஸ் பஜாஜ் என்ற 75 வயது முதியவர், கடந்த 2019 ஆகஸ்ட் 14 அன்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஹைதரா பாத்திலிருந்து பெங்களூருக்கு சென்றார். அங்கு அவருடைய லக்கேஜ்ஜுக்காக காத்திருந்தார். ஆனால் அவருடைய லக்கேஜ் வரவில்லை. ஸ்பைஸ் ஜெட் நிறுவன ஊழியர்களிடம் விசாரித்த போது, அவருடைய லக்கேஜ்ஜில் பவர் பேங்க் இருந்ததால், விமானத்தில் ஏற்றப்படவில்லை என்றும், அவர் அனுமதிக் கடிதம் வழங்கினால், அவருடைய லக்கேஜ்ஜை திறந்து அதிலிருந்து பவர்பேங்க்கை எடுத்துவிட்டு, லக்கேஜ்ஜை மறுநாள் காலை ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு அனுப்பிவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவரும் மறுநாள் காலை பெங்களூரு விமான நிலையத்துக்குச் சென்று லக்கேஜ்ஜுக்காக காத்திருந்துள்ளார். ஆனால், அவருடைய லக்கேஜ்ஜுக்குப் பதிலாக வேறு லக்கேஜ்ஜை விமான ஊழியர்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர். மிகுந்த ஏமாற்றமடைந்த அவர், ஹைதராபாத்தில் உள்ள உறவினர் ஒருவரிடம் ஹைதராபாத் விமான நிலையத்துக்குச் சென்று லக்கேஜ்ஜை பெற்றுக் கொள்ளும்படி கூறினார்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், லக்கேஜ்ஜை ஒப்படைப்பதில் பொறுப்பில்லாமலும், மிக அலட்சியமாகவும் நடந்துள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், ஸ்பைஸ்ஜெட்டின் அணுகுமுறை தன்னை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதித்துள்ளது என்று ஹைதராபாத் மாவட்ட நுகர்வு ஆணையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரை விசாரித்த நுகர்வு ஆணையம், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கன்ஷாம் தாஸ் பஜாஜுக்கு இழப்பீடாக ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x