Published : 18 Feb 2022 06:04 AM
Last Updated : 18 Feb 2022 06:04 AM

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதியில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு ஒருபோதும் அனுமதி வழங்கமுடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தேசிய பசுமைதீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வன உயிரிபாதுகாப்பு அமைப்பிடம் உரியஅனுமதி பெற்ற பிறகு இத்திட் டத்தை செயல்படுத்தலாம் எனக் கூறி, இதற்கான அனுமதியை ரத்து செய்ய மறுத்து விட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்தவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில்,தமிழக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் நியூட்ரினோ திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இத்திட்டம் அமையும் இடம்புலிகள் இடம்பெயரும் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் தனியார்ஆராய்ச்சி கழகத்துக்கு இத்திட்டத்துக்கான அனுமதி வழங்க முடியாது என மாவட்ட வன அதிகாரி அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். மேலும் இத்திட்ட அமைவிடம் உலகளவில் பல்லுயிர் உயிர்ப்பன்மை முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.

இதேபோல போடி மேற்குமலைப்பகுதியானது, புலிகள் வசிக்கும் மேகமலை, வில்லிபுத்தூர் புலிகள் சரணாலயப் பகுதியையும், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியையும் இணைக்கும் முக்கிய பகுதி. இங்கு புலிகள் மட்டுமின்றி பிற வனவிலங்குகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து செல்வதற்கான முக்கிய வழித்தடம் மட்டுமின்றி இனப்பெருக்கத்துக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

இந்த மலையில் மிகச்சிறிய அளவில் அதிர்வுகள் ஏற்பட்டால்கூட புலிகளின் நடமாட்டம் பாதிக்கப்படும். அப்படியொரு சூழல் ஏற்பட்டால் இந்த மலைப்பகுதியை புலிகள் தவிர்க்கும் நிலை ஏற்படும். எனவே இங்கு நியூட்ரினோ திட்டத்துக்கு ஒருபோதும் அனுமதிவழங்க முடியாது என திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விரைவி்ல் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் நியூட்ரினோ திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x