Last Updated : 15 Apr, 2016 10:37 AM

 

Published : 15 Apr 2016 10:37 AM
Last Updated : 15 Apr 2016 10:37 AM

பாலம் இடிந்து விழுந்தது மனிதன் செயலா, கடவுள் செயலா?- மாறி மாறி குற்றம்சாட்டும் அரசியல் கட்சிகள்

இந்த ஆண்டின் மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்றாக கருதப்படுவது கொல்கத்தா மேம்பால விபத்து. இந்த பாலம் இடிந்து விழுந்து கிட்டத்தட்ட இரண்டு வாரம் கழிந்து விட்டது. 27 பேர் உயிரிழப்பு, 80-க்கும் மேற் பட்டோர் காயம், வாகனங்கள், வீடுகள் என பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு யார் காரணம் என்ற கேள்விக்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை.

கொல்கத்தாவில் மக்கள் நட மாட்டம் அதிகம் உள்ள புராபஜார் பகுதியில் 2.2 கிமீ நீளத்துக்கு கட்டப்பட்டு வந்த இந்தப் பாலப் பணியை ஐவிஆர்சிஎல் என்ற நிறுவனம் மேற்கொண்டு வந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இரகவா புரு வெங்கட ரெட்டி கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் (ஐவிஆர்சிஎல்) என்பதே இதன் முழுப் பெயர். இந்நிறுவனத் துக்கு ஆந்திராவில் கூட பெரிய அளவில் மரியாதை இல்லை. எப்படி இந்த நிறுவனம் கொல்கத் தாவில் ஒப்பந்தம் பெற்றது என்பதே புரியாத புதிராக உள்ளது.

இடதுசாரி அரசா, மம்தா அரசா?

ஒப்பந்தம் கொடுத்தது யார் என்பதில் இடதுசாரிகளுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை எழுந்துள்ளது. இந்நிறுவனத்துக்கு முதலில் ரூ.164 கோடிக்கு ஒப்பந்தம் கொடுத்தது 2007-ம் ஆண்டு இருந்த இடதுசாரி அரசு. அதனால், அவர் கள்தான் பொறுப்பேற்க வேண்டும். தவறான நிறுவனத்துக்கும், தவ றான வரைபடத்துக்கும் ஒப்புதல் அளித்ததற்கு சிபிஎம் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று ஆளுங்கட்சி தெரிவிக்கிறது.

ஆனால், செயல்படாமல் முடங்கிக் கிடந்த இத்திட்டத்துக்கு மறுதிட்ட மதிப்பீடு தயாரித்து ரூ.450 கோடிக்கு அனுமதி அளித்தது திரிணமூல் அரசுதான். எனவே, மம்தா அரசுதான் முழுப் பொறுப் பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கள் குற்றம் சாட்டி வருகின்றன.

தேர்தல் நேரத்தில் அரசியல்ரீதி யான இந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறம் நடந்துவரும் நிலையில், சம்பவம் நடந்தவுடன் ஐவிஆர்சிஎல் நிறுவனத்தின் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில் உள்ள அலுவலகங்களில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டு பாலம் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள் ளன. இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ரஞ்சித் பட்டாச்சார்யா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி, கவனக்குறை வாக விபத்தை ஏற்படுத்துதல், கூட்டுசதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலம் இடிந்த இடத்தில் இருந்து கட்டுமானப் பொருட்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு தர ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாலப் பணிகளை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடவுள் செயல்

இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து பதிலளித்துள்ள ஐவிஆர்சிஎல் செய்தி தொடர்பா ளர், ‘இது கடவுள் செயல்’ என்று குறிப்பிட்டுள்ளார். கடும் விமர்சனத் துக்கு உள்ளாகி இருக்கும் இந்த வார்த்தை சட்டப்பூர்வமான பாது காப்பு கருதி வெளியிடப்பட்டுள்ள வார்த்தை என்கின்றனர் சட்ட நிபுணர்கள். கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ‘தி இந்து’விடம் இதுகுறித்து கூறும்போது, ‘தவிர்க்க முடியாத பெரும் விபத்துகளில் ‘கடவுள் செயல்’ என்ற வாதத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை பாது காக்க பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப் பளித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுப்பதில் இருந்து தப்பிக்க சட்டப்பூர்வ மாக இந்த வாதம் உதவும். ஆனால், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆபத்துகால முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள், கவனக்குறைவு, நியாயமான நட வடிக்கைகள் போன்ற பல அம்சங் களையும் விவாதித்த பின்பே ‘கடவுள் செயல்’ என்ற வாதம் பரி சீலனைக்கு எடுக்கப்படும். பாது காப்புக்கு தேவையான கடமையை செய்ய தவறுதல், தெரிந்தே கவனக் குறைவாக இருத்தல் போன்ற செயல்களை மறைப்பதற்காக ‘கடவுள் செயல்’ என்ற வாதம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எனவே, தங்கள் மீது எந்த தவறும் இல்லை. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி தற்செயலாக இந்த விபத்து நடந்துள்ளது என்பதை நிரூபித்தால் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்ப முடியும்’ என்று கூறினார்.

இந்தப் பாலத்தை கட்டும் பணி யில் உள்ள ஐவிஆர்சிஎல் நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, இந்நிறுவனத் துக்கு எப்படி அனுமதி வழங்கினீர் கள் என்று சிபிஎம் அரசில் நகர்ப் புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பிர்ஹாத் ஹக்கீமிடம் ‘தி இந்து’வுக்காக கேட்டபோது, “ஒப்பந்தம் அளித்ததில் எந்த தவறும் இல்லை. இந்நிறுவனத்துக்கு கட்டுமானப் பொருட்கள் மற்றும் வேலையாட்களை வழங்கும் துணை ஒப்பந்தத்தை திரிணமூல் கட்சித் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஊழல் நடந் துள்ளது. இதுகுறித்து பெரிய அள வில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும்’ என்று கூறினார்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியபோது, ‘மொத்த முள்ள 60 தூண்களில் 40-வது தூணில் வெடிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட மாதிரிகளின் தரம் குறித்து முழு விசாரணை நடத்தி விவரங்கள் வந்தபிறகே எதையும் சொல்ல முடியும்’ என்றார்.

எல்லா பாலங்களும் ஆய்வு

கொல்கத்தா பால விபத்தையடுத்து மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறும் அனைத்து பால கட்டுமானப் பணிகளையும் மறு ஆய்வு செய்ய அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். ஆனால், தேர்தல் முழுவீச்சில் நடந்து வருவதால், இப்பணியை இப்போதைக்கு செய்ய முடியாது. அடுத்த அரசு பொறுப்பேற்ற பிறகே மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x