Published : 09 Jun 2014 08:39 AM
Last Updated : 09 Jun 2014 08:39 AM

ஆந்திர முதல்வரானார் சந்திரபாபு நாயுடு: 2 துணை முதல்வர்கள், 19 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

புதிய ஆந்திர மாநிலத்தின் முதல் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை இரவு பதவியேற்றார். அவருடன் இரண்டு துணை முதல்வர்கள், 19 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில் பல்வேறு மாநில முதல் வர்கள், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல், திரைப்பட பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 2-ம் தேதி தெலங்கானா மாநிலம் உருவானது. இதனைத் தொடர்ந்து எஞ்சியுள்ள ராயலசீமா, கடலோர ஆந்திராவில் (சீமாந்திரா) அமைந்துள்ள 13 மாவட்டங்கள் முன்பு போலவே ஆந்திரப் பிரதேசமாக அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஆந்திர மாநிலத்துக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம்- பா.ஜ.க. கூட்டணி 106 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

புதிதாக உருவாகி உள்ள ஆந்திர மாநிலத்தின் முதல் முதல்வராக பதவியேற்க சந்திரபாபு நாயுடுவுக்கு மாநில ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் அழைப்பு விடுத்தார். அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.37 மணிக்கு விஜயவாடா-குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழக வளாகமான நாகார்ஜுனா நகரில் பிரம்மாண்டமான பதவியேற்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர் சிங், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், குஜராத் முதல்வர் ஆனந்தி பென், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், தமிழக முதல்வர் சார்பில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், செந்தில் பாலாஜி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அசோக் கஜபதி ராஜு, நடிகர் பாலகிருஷ்ணா எம்எல்ஏ, நடிகர்கள் பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் 19 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளன. நாயுடுவின் அமைச்சரவையில் 3 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மாநில ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அந்த மாநிலத்துக்கு அனைத்துவிதங்களிலும் மத்திய அரசு உதவி செய்யும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

பயிர்க் கடன் ரத்து

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றவுடன் விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்யும் கோப்பில் முதலில் கையெழுத்திட்டார். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடனையும் அவர் ரத்து செய்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதியின்படி பயிர்க் கடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன்களை அவர் இப்போது ரத்து செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x