Published : 17 Feb 2022 01:24 PM
Last Updated : 17 Feb 2022 01:24 PM
புதுடெல்லி: ’போர் பதற்றத்தில் உள்ள உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர ஏதுவாக உக்ரைனுக்கு எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம்’ என்று ஏர் பபுள் கெடுபிடிகளைத் தளர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
எந்த நேரமும் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்ற போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் வெளியேறலாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது.
ரஷ்யா, உக்ரைன் சர்ச்சை வலுத்து வரும் நிலையில் இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, தி நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான், ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் தங்கள் மக்களை உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளன.
உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் 20,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் பயண அறிவுரையில் மாணவர்கள் பலரும் தூதரகத்தை நாடினர். நாடு திரும்ப குறைந்த அளவிலேயே விமானங்கள் உள்ளன. இருக்கும் ஒரு சில விமானங்களிலும் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளன என்று கூறினர்.
இந்த நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள உக்ரைனுக்கு இந்திய விமான நிறுவனங்கள் எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கலாம். கரோனா பரவலால் அமலில் இருந்த ஏர் பபுள் கெடுபிடிகள் தளர்த்தப்படுகின்றன. தனியார் விமான நிறுவனங்கள் மட்டுமல்ல தனிப்பட்ட சார்ட்டர்ட் விமானங்களுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் பபுள் என்றால் என்ன? - சர்வதேச விமானப் பயணிகள் மூலமாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் எந்தெந்த நாட்டில் எல்லாம் தொற்று அதிகமாக உள்ளதோ அங்கிருந்து வரும் விமானங்களின் எண்ணிக்கையை மிகவும் குறைப்பதும், தேவைப்பட்டால் விமான சேவையை நிறுத்துவதும் ஏர் பபுள் எனப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியா 35 நாடுகளுடன் விமானப் போக்குவரத்தில் ஏர் பபுள் கெடுபிடியைக் கடைப்பிடிக்கிறது. இந்த நடைமுறை கடந்த மார்ச் 23, 2020-ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT