Published : 17 Feb 2022 08:24 AM
Last Updated : 17 Feb 2022 08:24 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதால் உடுப்பி, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த 9-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே முஸ்லிம் மாணவி கள் தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘‘கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது'' என உத்தர விட்டது.
இந்நிலையில் உடுப்பி, ஷிமோகா, மங்களூரு, சிக் மகளூரு ஆகிய இடங்களில் கல்லூரி நிர்வாகங்கள் உள்ளூர் தலைவர் களின் உதவியுடன் பெற்றோரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி யது. அதில் சுமூக முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று பி.யு.சி மற்றும் பட்டய கல்லூரிகள், பாலிடெக்னிக், நர்சிங் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டன. உடுப்பி, ஷிமோகா, மைசூரு ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கல்வி நிலையங்களுக்கு அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எனினும் கலபுரகியில் ‘ஜகாட்' உருது பள்ளிக்கு ஹிஜாபுடன் வந்த 80 மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் வகுப்பை புறக்கணித்த மாணவிகள், வீடுகளுக்கு திரும்பினர். இதேபோல சிக்கோடியில் கல்லூரிக்கு தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த 67 மாணவிகள், ‘எங்களுக்கு படிப்பை விட மதமே முக்கியம்’ எனக் கூறி தேர்வை புறக்கணித்தனர். இதுகுறித்து 11-ம் வகுப்பு மாணவி ஹினா கவுசர் கூறுகையில், “வகுப்பறை வரை ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி கேட்டேன்.
அதற்கு அனுமதி மறுத்ததால் வீட்டுக்கு திரும்பி விட்டேன். என்னால் ஹிஜாப் அணியாமல் இருக்க முடியாது. எங்களின் கோரிக்கையை ஏற்கும் வரை வகுப்புக்கு செல்ல மாட்டேன்'' என்றார்.அனுமதி தந்த பள்ளி உடுப்பியில் உள்ள உருது பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தேர்வு எழுத தலைமை ஆசிரியர் அனுமதி அளித்தார். இதனால் மாணவிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால், இந்துத்துவ அமைப்பினர் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
4-வது நாளாக வழக்கு விசாரணை ஹிஜாப் தொடர்பான வழக்கு 4-வது நாளாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முஸ்லிம் மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமார், ‘‘கல்வி நிலையங்களில் மாணவர்கள் துப்பட்டா, வளையல், தலைப்பாகை, சிலுவை, பொட்டு போன்ற மத அடையாளங்களை அணிந்து வருகின்றனர். அவற்றை குறிப்பிடாமல் ஹிஜாபை மட்டும் கர்நாடக அரசாணையில் குறிப்பிட்டுள்ளது உள்நோக்கம் கொண்டது. இந்திய ராணுவம் சீக்கியர்களுக்கு அவர்களின் மத நம்பிக்கைக்கு ஏற்ப தலைப்பாகை அணிய அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில் பள்ளியில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய தடை விதித்தது ஏன்? இவ்வாறு அவர் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT