Published : 16 Feb 2022 08:40 PM
Last Updated : 16 Feb 2022 08:40 PM

அரசு ஏன் ஹிஜாப்பை மட்டும் குறிவைக்கிறது? - கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வாதம்

பெங்களூரு: 'வளையல்கள் உள்ளிட்ட 100 அடையாளங்களை அணிந்துகொண்டு மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு வருகிறார்கள். ஆனால், அரசு ஏன் ஹிஜாப்பை மட்டும் குறிவைக்கிறது?' என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பி இஸ்லாமிய மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவிவர்ம குமார் தனது வாதத்தை முன்வைத்தார். தனது வாதத்தில் ரவிவர்ம குமார், "வளையல்கள் உள்ளிட்ட 100 அடையாளங்களை அணிந்துகொண்டு மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு வருகிறார்கள். ஆனால், அரசு ஏன் ஹிஜாப்பை மட்டும் குறிவைக்கிறது எனத் தெரியவில்லை. கூங்காட் அனுமதிக்கப்படுகிறது, வளையல்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் ஹிஜாப்புக்கு மட்டும் தடை. கிறிஸ்தவர்களின் சிலுவையை, சீக்கியர்களின் தலைப்பாகையை ஏன் தடை செய்யக்கூடாது? கர்நாடகாவில் மற்ற மதங்களின் அடையாளங்கள், சின்னங்கள் தடை செய்யப்படவில்லை. ஆனால், இஸ்லாமிய மாணவிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடகா கல்வி விதிகள், 1995 விதிப்படி, ஒரு கல்வி நிறுவனம் சீருடையை மாற்ற நினைக்கும்போது, ​​ஓராண்டுக்கு முன்னதாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும். அதேபோல், சட்டத்தின் கீழ் எந்த ஒரு சீருடையையும் பரிந்துரைக்கவில்லை என்பதால், ஹிஜாப் அணிய எந்தத் தடையும் இல்லை. எனவே, எந்த அதிகாரத்தின் கீழ் ஹிஜாப் அணிந்ததற்காக மாணவிகள் வெளியே நிறுத்தப்பட்டார்கள் என்பதுதான் எனது கேள்வி. இந்தச் செயலுக்கு பள்ளி, கல்லூரி நிர்வாகிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.

ஹிஜாப் அணிவதை தடை செய்து அரசாணை பிறப்பித்தது கல்லூரி மேம்பாட்டுக் குழு. பொதுவாக இந்தக் குழுக்கள், மாணவர் நலன் அல்லது மாணவர்களின் ஒழுக்கத்தைக் கையாள்வதற்காக அமைக்கப்படுவது கிடையாது. மாறாக, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமே இத்தகைய குழுக்கள் அமைக்கப்படும்" என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி அவஷ்தி, "கல்வித் தரத்தை பராமரிக்கும் நபர்கள், கல்லூரி சீருடைகளை பரிந்துரைக்க முடியாதா? ஒழுக்கத்துக்கு சீருடை அவசியம் கிடையாதா? கல்வித் தரங்களின் ஒரு பகுதியாகவே இவை இருக்கலாம்" என்றார்.

அதற்கு வழக்கறிஞர் ரவிவர்ம குமார், "கல்வித் தரத்துடன் இதற்கு எந்தத் தொடர்பும் இல்லை. மாணவர் ஆசிரியர் விகிதம், பாடத்திட்டம், வகுப்புகள் நடத்தப்படும் விதம் போன்றவற்றையே கல்வி தரம் கையாள்கிறது. சீருடைகளை பரிந்துரைக்க அந்தக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்பதே நான் கூற முயற்சிக்கும் கருத்து. அந்தக் குழு, சட்டமன்ற உறுப்பினர் (MLA) தலைமையில் செயல்படுகிறது. ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கல்வி குழுமத்தின் நிர்வாக அதிகாரம் வழங்குவது என்பது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும். யாராக இருந்தாலும் ஒரு எம்.எல்.ஏ என்பவர், அவர் அரசியல் கட்சி அல்லது சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர். மாணவர்களின் நலனை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிடமோ அல்லது அரசியல் சித்தாந்தத்திலோ ஒப்படைக்க முடியுமா?. சீருடை விவகாரத்தில் ஹிஜாப்புக்கு மதம் காரணமாக பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்த அதிகாரமும் இல்லாத நபர்களால் மாணவிகள் வகுப்பறைக்கு வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார்கள்" என்று வாதிட்டார்.

வாதத்தை முடிக்கும் தருவாயில், ’சீருடை எதுவும் பரிந்துரைக்கப்படக் கூடாது என்று பரிந்துரைக்கிறீர்களா? என்று நீதிபதி தீட்சித் கேட்டதற்கு பதிலளித்த ரவிவர்ம குமார், "வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் முழக்கமாக இருக்க வேண்டும். மேலும் பன்மைத்துவம் காக்கப்பட வேண்டும். தலைப்பாகை அணிந்த சீக்கியர்கள் ராணுவத்தில் இருக்க முடியும் என்றால், தங்கள் சொந்த மத அடையாளங்களை கொண்ட ஒருவரை ஏன் பள்ளி, கல்லூரி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்க முடியாது? இஸ்லாமிய பெண்களை வகுப்பறைகளுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருப்பது அவர்களின் கல்விக்கே அழிவை ஏற்படுத்தும்" என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார். இதையடுத்து வழக்கு வியாழக்கிழமை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக நேற்றும் இந்த விவகாரத்தில் வாதங்கள் நடைபெற்றன. அப்போது இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், “மாணவிகள் ஹிஜாப் அணிவதால் யாருக்கும் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை. பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் மக்களின் மத நம்பிக்கையிலும், தனிப்பட்ட உரிமையிலும் அரசு தலையிட முடியாது.

அரசியலமைப்பு சட்டத்தின் 25-ம் பிரிவின்படி ஒருவர் தனது மத நம்பிக்கைகளை பின்பற்று வதற்கு முழு உரிமை இருக்கிறது. நான் பள்ளிக்கு செல்லும்போது ருத்ராட்சை அணிந்து சென்றேன். எனது மத நம்பிக்கை என்பதால் யாரும் அதை தடுக்கவில்லை. இப்போதும் கூட நீதிபதிகள் ருத்ராட்சை அணிகிறார்கள். தங்கள் மத நம்பிக்கையின்படி நீதிபதிகள் இதை அணி கிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் தென்னிந்திய இந்து பெண் ஒருவர் வகுப்பில் மூக்குத்தி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாணவியின் நம்பிக்கையை கருத்தில் கொண்டு, அவருக்கு மூக்குத்தி அணிய அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல கனடா நீதிமன்றம் சீக்கியர் தலைப்பாகை அணிந்து வகுப்பில் கல்வி கற்க அனுமதி அளித்துள்ளது. இதைப் போல ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்க வேண்டும். உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x