Published : 16 Feb 2022 03:18 PM
Last Updated : 16 Feb 2022 03:18 PM
சோனிபட்: சமூக ஆர்வலரும், பஞ்சாப் நடிகருமான தீப் சிங் சித்து உயிரிழந்த விபத்துக்குக் காரணம், கவனக்குறைவாக செயல்பட்டதுதான் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சோனிபட் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் அத்துமீறிக் கொடி ஏற்றப்பட்டது. இதனை ஏற்றியவர் பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பகுதி விவசாயிகளைத் தூண்டி ஊர்வலத்தில் மாற்றங்கள் செய்ததாக அப்போது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், சில மாதங்கள் முன்புதான் தீப் சித்து பிணையில் வெளியவந்தார். இதனிடையே, நேற்று இரவு டெல்லியில் இருந்து பஞ்சாப் நோக்கி தனது காதலியுடன் பயணித்து கொண்டிருந்தபோது, தீப் சித்துவின் கார் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் தீப் சித்து இறந்த நிலையில், அவரின் காதலி ரீனா பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக சோனிபட் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். முதல் தகவல் அறிக்கையில், தீப் சித்து காருக்கு முன்னாடி சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. லாரி டிரைவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் போலீஸார்.
ஏர்-பேக்கால் உயிர் தப்பிய காதலி: தி க்வின்ட் தளத்திடம் பேசிய சோனிபட் காவல்துறை மூத்த அதிகாரி, "நேற்றிரவு 7.30 மணியளவில் டெல்லியின் குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) எக்ஸ்பிரஸ்வே சாலையில் காதலி ரீனா ராயுடன் சென்று தீப் சித்து தனது ஸ்கார்பியோ காரை அவரே ஓட்டிச் சென்றுள்ளார். அதிக வேகத்தில் சென்ற கார், முன்னால் நின்ற லாரி மீது மோதியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ரீனா சீட் பெல்ட் அணிந்திருந்ததால், விபத்து நடந்தவுடன் ஏர்-பேக் திறந்து அவரை உயிரை காப்பற்றியுள்ளது. ரீனா அமர்ந்திருந்த இடது பக்கத்தில் கார் அதிக அளவு சேதம் அடையவில்லை.
அதேநேரம், தீப் சித்து சீட் பெல்ட் அணிந்திருந்தாலும், விபத்துக்கு பிறகு ஏர்பேக் திறந்தவுடன் அது வெடித்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழக்க நேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனினும், விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. தீப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. ரீனா உடல்நிலை இப்போது சீராக உள்ளது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, லாரி டிரைவரை பிடிக்க குழுக்கள் அமைத்துள்ளோம். தீப் சித்துவின் காரில் இருந்து பாதி குடித்த மது பாட்டிலை மீட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
தீப் சித்துவின் காதலி ரீனா ராய் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை. பஞ்சாபி திரைப்படமான ’ரங் பஞ்சாப்’ படத்தில் சித்துவுக்கு ஜோடியாக முதல்முறையாக ரீனா ராய் நடித்தார். அதன்பின் காதலர்களாக வலம்வந்த இருவரும் விபத்துக்கு ஒருநாள் முன்னர்கூட, ஒன்றாக எடுத்த புகைப்படத்தை வலைதளங்களில் பகிர்ந்து காதலை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும், சித்து புதிதாக நடித்து வந்த ஒரு படத்திலும் ரீனா நடிக்க இருந்ததாக பஞ்சாப் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சித்துவின் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, அகாலிதளம் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT