Published : 16 Feb 2022 01:02 PM
Last Updated : 16 Feb 2022 01:02 PM
ஹைதராபாத்: பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் சென்று சந்திக்கவுள்ளார்.
மத்தியில் பாஜகவிற்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவுக்கு பின்னர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தவும் மம்தா திட்டமிட்டு வருகிறார். ஆனால், இந்த அணியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு இடமில்லை என்று அவர் ஏற்கெனவே தெளிவுபடுத்தி விட்டார்.
இதன் தொடர்ச்சியாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சித் தலைவருமான எச்.டி.தேவேகவுடா நேற்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை சந்தித்து பேசினார்.
அப்போது ‘‘வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், நாம் வகுப்புவாத சக்திகளுடன் போராடி நாட்டைக் காப்பாற்ற வேண்டும்’’ என தேவகவுடா கூறியதாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.
இந்தநிலையில் அடுத்தகட்டமாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை, சந்திரசேகர் ராவ் வரும் 10-ம் தேதி மும்பை சென்று சந்திக்கவுள்ளார். உத்தவ் தாக்கரேயின் அழைப்பின் பேரில் சந்திரசேகர் ராவ் செல்வதாகவும், இந்திய கூட்டாட்சி அமைப்பை காப்பாற்றுவதற்காக சந்திரசேகர் ராவ் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை முழுமையாக ஆதரிப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளதாகவும் தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT