Published : 16 Feb 2022 11:25 AM
Last Updated : 16 Feb 2022 11:25 AM
பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ள முஸ்லிம் மாணவிகள் ஐந்து பேரின் பெயர், வீட்டு முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை வெளியிட்ட கர்நாடக பாஜகவுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த சம்பந்தப்பட்ட ட்வீட்டை கர்நாடக பாஜக நீக்கியிருந்தாலும் கூட அக்கட்சிக்குப் பலரும் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
நீக்கப்பட்ட அந்த ட்வீட்டில், ’ஹிஜாப் சர்ச்சையில் ஈடுபட்ட ஐந்து மாணவிகள் இவர்கள்தான். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு இதுபோன்ற சிறுமிகளை வைத்து அரசியல் செய்ய எவ்வித குற்ற உணர்வும் ஏற்படவிடவில்லையா? இதுதான் பிரியங்கா காந்தி சொன்ன பெண் சக்தி; போராடும் சக்தி என்ற வாக்கியத்தின் அர்த்தமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
உடனே சிவசேனா எம்.பி.யும், மகளிர் மேம்பாட்டு நாடாளுமன்ற ஆணையத்தின் உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டரில், ’சிறுமிகளின் முகவரியை வெளியிட்ட கர்நாடக பாஜகவுக்கு வெட்கமில்லையா? இது எவ்வளவு உணர்வற்ற, பொறுப்பற்ற, மோசமான செயல் எனப் புரியவில்லையா? கர்நாடக காவல்துறை டிஜிபி, ட்விட்டர் இந்தியா இந்த ட்வீட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தார். மாணவிகளின் பெயர், முகவரியை வெளியிட்டது கிரிமினல் குற்றம் என்று இன்னொரு ட்வீட்டில் கூறியிருந்தார்.
பியுசி, பட்டய கல்லூரிகள் திறப்பு: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 5-ம் தேதி பி.யு.சி (மேல்நிலை வகுப்புகள்) மற்றும் பட்டயகல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வன்முறை ஏற்பட்டதால் கடந்த 9-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் 19-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு அருகே போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே முஸ்லிம் மாணவிகள் தொடுத்துள்ள ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம், ''கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது'' என உத்தரவிட்டது. கடந்த திங்கள்கிழமை 10-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிகளுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஹிஜாபை அகற்றிவிட்டு வந்த பிறகே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இன்று மாநிலம் முழுவதிலும் உள்ள பியுசி, பட்டய கல்லூரிகள், பாலிடெக்னிக், நர்சிங் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT