Last Updated : 16 Feb, 2022 07:26 AM

1  

Published : 16 Feb 2022 07:26 AM
Last Updated : 16 Feb 2022 07:26 AM

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுலுக்கு பதில் பிரியங்கா: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் இறுதி முடிவு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்திக்கு பதிலாக அவரது இளைய சகோதரியானப் பிரியங்கா வதேரா முன்னிறுத்தப்படுவதாகத் தெரிகிறது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைக்கும் பலனை பொறுத்து கட்சி தலைமை இறுதி முடிவு எடுக்க உள்ளது.

கடந்த இரண்டு வருடமாக தேசியத் தலைவர் பதவிக்கு 51 வயதான ராகுல் காந்தியின் பெயர் பேசப்பட்டு வந்தது. ஆனால், அவரது முன்கோபக்குணம் காரணமாக பொதுவெளியில் ஆவேசப்பட்டு அடிக்கடி வார்த்தைகளை வீசி விடுகிறார் எனப் புகார் உள்ளது.

மேலும், ஏற்கெனவே அவர் தேசியத் தலைவர் பதவியில் இருந்த போது நடந்து கொண்ட விதத்தை காங்கிரஸின் மூத்த தலைவர்கள் விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ராகுலுக்கு தன் கட்சி தலைவர் பதவியில் அமரும் வாய்ப்பு குறையத் துவங்கி விட்டது. இதற்கு பதிலாக, ராகுலை போலவே காந்தி குடும்பத்தின் மற்றொரு வாரிசான பிரியங்கா வதேராவின் பெயர் தற்போது தலைவர் பதவிக்கு பேசப்படுகிறது.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் நேரடியாக அரசியல் களம் இறங்கினார் பிரியங்கா. தேசியப் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும் அமர்த்தப்பட்ட வருக்கு உத்தர பிரதேச மாநில பொறுப்பு அளிக்கப்பட்டது. அப்போது முதல் பாஜக ஆளும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரின் முக்கியத்துவம் பெற்று வருகிறார் பிரியங்கா. தொடர்ந்து வந்த சட்டப்பேரவை தேர்தலிலும் இவர் காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளராக்கப்பட்டார். இதனால், காலியாகத் தொடரும் காங்கிரஸின் நிரந்தரத் தலைவர் பதவியில் ராகுலுக்கு பதிலாகப் பிரியங்கா பேசப்படுகிறார்.

உத்தர பிரதேசத்தில் சுமார் இருபது வருடங்களுக்கு பின் தனித்து போட்டியிடுகிறது காங்கிரஸ். ஏழு கட்டமாக பிப்ரவரி 10 முதல் துவங்கி நடைபெற்று வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுலுடன், சோனியா காந்தியின் பெயரும் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலில் இருந்தது. ஆனால், தேர்தல் அறிவிப்பிற்கு பின் இருவருமே ஒருமுறை கூட பிரச்சாரம் செய்யவில்லை. இதற்கு அங்கு காங்கிரஸுக்கு ஆட்சி அமைக்கும் அளவிற்கு செல்வாக்கு இல்லை என்பது காரணம். இருப்பினும், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு கிடைக்கும் தொகுதிகளால் பிரியங்காவின் அரசியல் செல்வாக்கை கட்சி தலைமை அறியும் வாய்ப்புகள் உள்ளன.

இது குறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் காங்கிரஸின் நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது,‘பிரதமர் பதவிக்கு காங்கிரஸின்துருப்புச் சீட்டாக பாதுகாக்கப்பட்ட வர் பிரியங்கா. ராகுல் மீண்டும் தலைவராக வேண்டும் என ஓங்கி ஒலித்தக் குரல்கள் தற்போது பிரியங்கா எனக் கூறத் துவங்கி விட்டன. ராகுல் தலைவரானாலும், ஆகாவிட்டாலும் காங்கிரஸை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி காலிசெய்யும் நிலை நிலவுகிறது. எனவே, இதை தடுத்து கட்சியை காப்பாற்ற பிரியங்காவால் மட்டுமே முடியும்’ எனத் தெரிவித்தன.

தன் தாய் சோனியா காந்திக்குபின் காங்கிரஸின் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டவர் ராகுல். 2017-ம் ஆண்டு டிசம்பர் 16 முதல் அப்பதவியில் தொடர்ந்தவரின் தலைமையிலான கட்சிக்கு 2019 மக்களவை தேர்தலில் படுதோல்வி கிடைத்தது. இதனால், தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி 2019-ல் ஜுலை 3-ல் ராஜினாமா செய்திருந்தார். இதன் பிறகு அப்பதவியை ஏற்க காங்கிரஸின் மூத்த தலைவர்களிலும் ஒருவர் கூட முன்வரவில்லை. இதனால், வேறு வழியின்றி சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக தொடர்கிறார். கரோனா பரவலால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றால் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x