Published : 17 Apr 2016 08:12 AM
Last Updated : 17 Apr 2016 08:12 AM

ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்: 15 பேர் கைது

ஆந்திராவில் நேற்று காலையில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 வனத்துறை ஊழியர்கள் உட்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து கடப்பா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நவீன் குலாட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடப்பாவிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரி மூலம் செம்மரங்கள் கடத்துவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அதிகாலையில் ராயச்சோட்டி, ரயில்வே கோடூரு பகுதிகளில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் 2.5 டன் எடை கொண்ட செம்மரங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியில் இருந்த 4 வனத் துறை ஊழியர்கள், பின்னால் கார்களில் வந்த மேலும் 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், செம் மரங்களை சென்னைக்கு கடத்துவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த லாரி, 4 கார்கள், 4 பைக்குகள், 4 செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி. கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வனத்துறை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x