Published : 15 Feb 2022 04:32 PM
Last Updated : 15 Feb 2022 04:32 PM

‘‘நான் உண்மையை மட்டுமே பேசுவேன்; பொய்யான வாக்குறுதி என்றால் அவரை கேளுங்கள்’’- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

சண்டிகர்: "பொய்யான வாக்குறுதிகளை நான் அளிக்க மாட்டேன்; பொய்யான வாக்குறுதிகளை நீங்கள் கேட்க விரும்பினால் பிரதமர் மோடி பேசுவதைக் கேளுங்கள்" என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சி அமைக்க முயல்கிறது.
பாஜக ஆதரவில் பஞ்சாபில் ஆட்சி செய்த சிரோமணி அகாலி தளம், 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் பிரச்சினையில் பிரிந்தது. தற்போது சிரோமணி அகாலி தளம் தனித்து போட்டியிடுகிறது. ஏற்கெனவே, அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜக.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியால் பஞ்சாபின் 117 தொகுதிகளில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘நவி சோச் நவா பஞ்சாப்’ என்ற பெயரில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:

”பொய்யான வாக்குறுதிகளை நான் அளிக்க மாட்டேன். பொய்யான வாக்குறுதிகளை நீங்கள் கேட்க விரும்பினால், பிரதமர் மோடி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பாதல், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சொல்வதைக் கேளுங்கள். நான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசும் எண்ணம் கொண்டவன்.

15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வேன் என்றும், 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்றும் பிரதமர் மோடி கூறினார். யாருக்காவது கிடைத்ததா? எல்லாம் பொய் வாக்குறுதிகள்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு புதிய பரிசோதனை செய்ய விரும்புபவர்கள், எல்லையில் உள்ள மாநிலமான பஞ்சாபில் அமைதியை பேணுவது மிகவும் முக்கியமானது என்பதை உணர வேண்டும். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே அதைச் செய்ய முடியும்."

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x