Published : 15 Feb 2022 12:59 PM
Last Updated : 15 Feb 2022 12:59 PM
புதுடெல்லி: தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுதொடர்பாக மாணவியின் தந்தை 3 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதயமேரி பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். பள்ளி விடுதி அறையை சுத்தம் செய்யச் சொல்லி வார்டன் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
விடுதி வார்டன் கைது
ஆனால், மதமாற்றம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி வார்டன் சகாய மேரியை போலீஸார் கைது செய்தனர். மாணவியின் தற்கொலைக்கு கட்டாய மதமாற்றம்தான் காரணம் எனக்கூறி பாஜகவினரும் இந்து அமைப்பினரும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக்குழுவினரும் தஞ்சாவூருக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மாவட்ட எஸ்பி, கூடுதல் ஆட்சியர், கல்வி அதிகாரி, பிரேதப்பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தினர். இதனிடையே, தனது மகள் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர், சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.
தமிழக அரசு கோரிக்கை
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பீலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, “இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தினமும் உத்தரவு பிறப்பித்து வந்தது. மாணவியின் தற்கொலை வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. மாநில போலீஸார் விசாரணை நடத்த எந்த அவகாசமும் வழங்கப்படவில்லை. சிபிஐ விசாரணைக்கு மாற்றிய முறையும் சரியானது அல்ல. எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” எனகோரினர்.
அதற்கு நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் முதல்கட்டமாக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி சிபிஐ போலீஸாரே விசாரணை நடத்தட்டும். பிற விவகாரம் தொடர்பாக அடுத்தகட்டமாக விசாரிக்கலாம். அதே நேரம் தமிழக அரசு தொடர்ந்துள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கில் மாணவியின் தந்தை முருகானந்தம், 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்” என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “இந்த விவகாரத்தில் சிபிஐடி விசாரணை கோரிதான் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் சிபிஐ விசாரணை கோரியதால் அதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவும் வழக்கில் கோரப்படாத விசாரணைக்கு உயர் நீதிமன்றம் வலுக்கட்டாயமாக உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையே தவறானது. எனவே, இடைக்கால தடைவிதிக்க வேண்டும்” என மீண்டும் கோரினார்.
நீதிபதிகள் மறுப்பு
அதையேற்க மறுத்த நீதிபதிகள், “இந்த விவகாரத்தை தமிழக அரசு கவுரவ பிரச்சினையாக பார்க்க வேண்டாம். மாணவி தற்கொலை சம்பவத்தில் நடந்த விஷயங்கள் எல்லாம் எங்களுக்கும் தெரியும். அதேநேரம் தற்போதைய நிலையில் சிபிஐ விசாரணையை தொடங்கட்டும். மாணவியின் தந்தை பதிலளித்த பிறகு அடுத்தகட்டமாக விசாரிக்கலாம்” என கூறி வழக்கை 3 வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி பள்ளி நிர்வாகமான தூய இருதயமேரி சபை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்று உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT