Published : 15 Feb 2022 06:43 AM
Last Updated : 15 Feb 2022 06:43 AM
ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத மோசடி நிகழ்வு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் (2013) நிகழ்ந்தது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
குஜராத்தைச் சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும்ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 வங்கிகளில் பெற்ற ரூ.22,842 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது. கடந்த 2013-ம்ஆண்டு நிகழ்ந்த இந்த மோசடியின்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் பதவியில் இருந்தது. அடுத்த ஆண்டு இந்தத் தொகையானது வாராக் கடனாக சேர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.
வங்கியில் நிகழ்ந்த இந்த மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. பொதுவாக இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதற்கு ஆகும் காலத்தைவிட குறைவான காலத்திலேயே விசாரணையை நடத்தி குற்றத்தை பதிவுசெய்துள்ளது. வங்கி மோசடி தொடர்பான வழக்கில் மிக அதிகமான தொகை கொண்ட வழக்கு இதுவாகும்.
ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய மத்திய நிதி அமைச்சரிடம் ஏபிஜி ஷிப்யார்டு முறைகேடு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்)பதிவு செய்வதில் தாமதமாவது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "2013-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கடன் குறித்து எதிர்க்கட்சிகள் கோஷம் போடுகின்றன. இந்த மோசடி பிரதமர் மோடி ஆட்சியில் நிகழ்ந்தது போன்று சித்தரிக்க முயற்சிக்கின்றன. ஆனால் உண்மையில் மோசடி நிகழ்ந்தது 2013-ம் ஆண்டு. 2014-ம் ஆண்டில் வாராக் கடனாக மாற்றப்பட்டது. பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இவை நிகழ்ந்துவிட்டன. ரிசர்வ் வங்கியில் ஆலோசனை நடத்த வந்த நேரத்தில் அரசியல் பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால் தவிர்க்க முடியாத கேள்வியால் பதிலளிக்க நேர்ந்துள்ளது.
ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்தின் கணக்கை யர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் தணிக்கை செய்து அதன் விவரங்களை சிபிஐ-யிடம் அளித்துள்ளது. இப்போது இந்த விவகாரம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) வசம் சென்றுவிட்டது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT