Last Updated : 15 Feb, 2022 06:52 AM

1  

Published : 15 Feb 2022 06:52 AM
Last Updated : 15 Feb 2022 06:52 AM

உ.பி. தேர்தலில் 2017-ல் தோல்வி அடைந்த தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கும் பாஜக

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் கடந்த 2017 தேர்தலில் தான் தோல்வியடைந்த தொகுதிகளில் பலவற்றை பாஜக இம்முறை தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு கடந்த 2017-ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக 384-ல் போட்டியிட்டு 312 தொகுதிகளில் வென்றது. பாஜகவுடன் மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேலின் அப்னா தளம், பிற் படுத்தப்பட்ட சமூகத் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) ஆகியவை கூட்டணி அமைத்திருந்தன. இதில், அப்னா தளம் 11-ல் போட்டியிட்டு 9-ல் வென்றது. ராஜ்பரின் எஸ்பிஎஸ்பி 8-ல் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது.

இந்நிலையில் ராஜ்பரின் எஸ்பிஎஸ்பி இந்த முறை அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கூட்டணியில் இணைந்தது. இதனால், 2016-ல் தொடங்கப்பட்ட மீனவர் சமூகத்தின் நிஷாத் கட்சியை பாஜக புதிதாக தனது கூட்டணியில் சேர்த்தது.

2017-ல் சிறியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 100 தொகுதி களில் போட்டியிட்ட நிஷாத் கட்சிக்கு பாஜக 15 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. இதுபோல் அப்னா தளம் கட்சிக்கு 15 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்த 30 தொகுதிகளில் 14 தொகுதிகள் பாஜக கடந்த 2017 தேர்தலில் தோல்வி அடைந்தது. இதில் நிஷாத் கட்சிக்கு 9 தொகுதிகளும் அப்னா தளம் கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப் பட்டுள்ளன.

தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றை இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு பாஜக ஒதுக்கியதாக தெரிகிறது. பாஜக கூட்டணியின் இந்த இரண்டு கட்சிகளும் கிழக்கு உ.பி.யில் செல்வாக்கு பெற்றவை ஆகும்.

உ.பி. தேர்தலில் அனைத்து கட்சி களும் எல்லா தொகுதிகளுக்கும் இன்னும் வேட்பாளர்களை அறி விக்கவில்லை. பாஜக கூட்டணியில் இதுவரை 379 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் அறி விக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த மேலும் சில தொகுதிகளை கூட்டணிக் கட்சி களுக்கு கூடுதலாக ஒதுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதனிடையே, பாஜக கூட்டணி யுடன் நேரடி போட்டியை சந்திக்கும் சமாஜ்வாதி கூட்டணியின் நிலை வித்தியாசமாக உள்ளது. இதனுடன், ஜாட் சமூக ஆதரவுக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி), ராஜ்பரின் எஸ்பிஎஸ்பி, அகிலேஷ் யாதவின் சித்தப்பா ஷிவ்பால் சிங் யாதவின் பிரகதிஷீல் சமாஜ்வாதி லோகியா கட்சி கூட்டணி அமைத்துள்ளன.

இவற்றில் ஆர்எல்டிக்கு மிக அதிகமாக 32, எஸ்பிஎஸ்பி கட்சிக்கு 24, ஷிவ்பால் சிங் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி என சமாஜ்வாதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் இதுவரை எந்த மாநிலத்திலும் நடந்திராத வகையில் தனது கூட்டணிக் கட்சியான ஆர்எல்டியின் கைபம்பு சின்னத்தில் சமாஜ்வாதி தனது 8 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x