Published : 14 Feb 2022 04:52 PM
Last Updated : 14 Feb 2022 04:52 PM

மம்தாவுக்கு மீண்டும் மகத்தான வெற்றி: உள்ளாட்சித் தேர்தலில் திரிணமூல் சாதனை

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் சிலிகுரி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 272 இடங்களில் 203 இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார்.

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்த பாஜகவால் 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றியை பதிவு செய்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 144 இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 134 இடங்களை கைப்பற்றியது, பாஜக மூன்று இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. காங்கிரஸும் இடதுசாரிகளும் தலா இரண்டையும் வென்றனர்.

மேற்கு வங்காளத்தின் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐந்து நகரங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் சிலிகுரி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. சிலிகுரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மொத்தமுள்ள 47 இடங்களில் 37 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

பாஜக 5 இடங்களிலும், இடதுசாரிகள் 4 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் ஓரிடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. 2015ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இதே சிலிகுரியில் இடதுசாரி கட்சிகள் 23 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் மேற்குவங்க நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக பெரும் வெற்றி பெரும் சூழலில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x