Published : 19 Jun 2014 09:16 AM
Last Updated : 19 Jun 2014 09:16 AM
உதவியாளர்களை நியமித்துக் கொள்வதில் மத்திய அமைச்சர் களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலுவான கடிவாளம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மோடியின் அனுமதியின்றி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எவரையும் அவர்களால் நியமித்துக்கொள்ள முடியவில்லை.
புதிதாகப் பொறுப்பேற்கும் மத்திய கேபினட் அமைச்சர்கள், தங்கள் பணிக்கு உதவியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை 16 பேரை நியமித்துக்கொள்ள அரசு அனுமதிக்கிறது. இதில் 2 முதல் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருப்பார்கள். தனிப் பொறுப்புடைய இணை அமைச் சர்கள் தங்களுக்கு உதவியாக 13 பேரையும் இணை அமைச்சர்கள் - 9 பேரையும் நியமித்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு நியமிக்கப்படுவோர் அமைச்சர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இதனால் அமைச்சர்கள் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களை உதவியாளர்களாக நியமித்துக்கொள்ளும் விதிமீறல் கள் நடப்பதாக புகார்கள் கிளம் பின. இதற்காக, அதிகாரிகள் நிலையிலான நியமனங்களை முறையாக அங்கீகரிக்க வேண்டி, மத்திய அமைச்சக செயலாளர்கள் ஆலோசனைக் குழுவுக்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதிகாரம் அளித்தது. ஆனால் அமைச்சர்கள் தங்கள் உதவியாளர்களை பணியில் அமர்த்திய பின், இக்குழு ஒரு சம்பிரதாய அங்கீகாரம் அளிப்பதுடன் தனது பணியை முடித்துக்கொண்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் இத்தகைய புகார்களை தடுப்பதுடன், அதிகாரிகள் குறித்து விசாரணை செய்த பின் பணிகளில் அமர்த்த மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களின் உதவியாளர்களாக அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதில் இந்த ஆலோசனைக் குழு எவ்வித பாரபட்சமும் இன்றி சுதந்திரமாக செயல்பட மோடி அதிகாரம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வகையில் அந்தகுழு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி ஆகியோர் பரிந்துரைத்த அதிகாரிகளில் சிலரை ஏற்க மறுத்து விட்டது.
இதன் காரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் தங்கள் உதவியாளர்களை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய அமைச்சக வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் கூறுகையில், “டெல்லியில் ஒரு பெரிய குழு, எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் தங்கள் முழு செல்வாக்கையும் பயன்படுத்தி உதவியாளர் பதவிகளை அனுபவித்து வந்தது. இவர்களில் சிலரால்தான் 2ஜி அலைக்கற்றை கோப்புகள் பத்திரிகைகளில் கசிந்தது. இதுபோன்ற விஷயங்களை நன்கு அறிந்தததால்தான் மோடி, தனது அமைச்சர்களுக்கு கடிவாளம் இட்டுள்ளார்” என்கின்றனர்.
இதன் பிறகும் விவசாயத் துறை அமைச்சர், தனது உறவினரின் மருமகனான கர்நாடகத்தின் 1993 பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியை நியமித்துக்கொள்ளவும், கிராம வளர்ச்சித் துறை இணை அமைச்சர் - ஐஏஎஸ் பயிற்சியை முழுமையாக முடிக்காத சிக்கிமின் 2011 பேட்ஜ் அதிகாரியை நியமித்துக்கொள்ளவும் முயற்சி செய்துவருவதாக அந்த வட்டாரங்கள் கூறின.
கடந்த ஆட்சியில் உதவியா ளர்களாக இருந்தவர் களை நியமிக்க வேண்டாம் என அறிவுறுத்தி அமைச்சர்களுக்கு ஆலோசனைக் குழு கடிதம் எழுதியுள்ளதாகவும், இதனால் ஒவ்வொரு அமைச்சரிடமும் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் சேர காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT