Published : 13 Feb 2022 03:26 PM
Last Updated : 13 Feb 2022 03:26 PM

'குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.. ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமர் ஆவார்' - ஒவைசி

ஹைதராபாத்: ஹிஜாப் அணிந்த பெண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக வருவார் என மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணிந்து முஸ்லிம் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, ஒவைசி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தான் பேசிய வீடியோ அடங்கிய ட்வீட் ஒன்றை பதிவிட்ட ஒவைசி, அதில், "ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்கு செல்வார்கள். மாவட்ட கலெக்டர்களாக, நீதிபதிகளாக, டாக்டர்களாக, தொழிலதிபர்களாக மாறுவார்கள். அதனை பார்க்க நான் உயிருடன் இல்லாமல் போகலாம். ஆனால், என் வார்த்தைகளை குறித்துவைத்து கொள்ளுங்கள். ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார்.

மேலும், ஹிஜாப் அணிய வேண்டும் என்று எங்கள் பிள்ளைகள் முடிவெடுத்து பெற்றோர்களிடம் தெரிவித்தால், அவர்களுக்கு ஆதரவளிப்போம். யார் அவர்களை தடுக்க முடியும் என்று பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி உள்ளது. அதேநேரம், ஒவைசியின் இந்தப் பேச்சு தொடர்பாக, உத்தர பிரதேச துணை முதல்வரும், பா.ஜ.க தலைவருமான தினேஷ் சர்மா, "உத்தர பிரதேசத்தில் வகுப்புவாதத்தை தூண்ட எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன. வகுப்புவாதத்திற்கு இங்கு இடமில்லை. சமாஜ்வாதி கட்சியின் பி டீம் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்" என்று பேசியுள்ளார்.

முன்னதாக, கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். ஹாசன் அரசு கல்லூரிக்கு நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை காவித் துண்டு அணிந்த‌ ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக 'அல்லாஹ் அக்பர்' என முழக்கம் எழுப்பிய காட்சி உலகளவில் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரலானது. நீதிமன்றம் வரை சென்றுள்ள இந்த விவகாரம் நாட்டில் பரபரப்பாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x