Published : 13 Feb 2022 10:36 AM
Last Updated : 13 Feb 2022 10:36 AM
லஞ்சம் பெற்று பிஎப் பயனாளர்கள் பற்றிய தகவலைத் வெளியிட்ட 20 இபிஎப்ஓ நிறுவன பணியாளர்கள் மீது மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் பேடிஎம், போன்பே, கூகுள் பே போன்ற தனியார் நிறுவனங்களுக்கு இவர்கள் பயனர்கள் பற்றிய விவரங்களைத் தந்துள்ளது தெரியவந்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு பயனர்கள் பற்றிய தகவல்களை இபிஎப்ஓ அலுவலக பணியாளர்களே அளிப்பது தொடர்பாக வெளியான புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது. குண்டூரில் உள்ள இபிஎப்ஓ மண்டல அலுவலகத்தில் இது குறித்து விசாரணை நடத்தியது அப்போது சில பணியாளர்கள் இதுபோன்று தகவல்களை அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த ஊழியர்களின் மொபைல் போனில் பயனர்கள் பற்றிய விவரங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இபிஎப்ஓ பயனர்கள் பற்றிய விவரம், அவர்களுக்கு அனுப்பப்படும் ஓடிபி எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் சங்கேத கடவு எண் உள்ளிட்ட விவரங்களை இவர்கள் தனியார் பிஎப் ஆலோசகர்களுக்கு பகிர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல்களைக் கொண்டு தனியார் அமைப்புகள் இபிஎப்ஓ அதிகாரபூர்வ செயல்பாடுகளைப்போல செயல்பட்டுள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் பயனர்கள் பற்றிய தகவல்களை அளிப்பதற்கு ஊழியர்கள் லஞ்சம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மொபைல் செயலி மூலமாக பயனர்களுக்கு அளிக்கப்பட்ட தகவல் விவரங்களை இந்த ஊழியர்கள் தங்களது மொபைல் போனில் ஸ்கிரீன்ஷாட்டாக பதிவு செய்து நிறுவனங்களுக்கு பகிர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இது தவிர மும்பை இபிஎப் அலுவலகத்தில் நடைபெற்ற ரூ. 18 கோடி முறைகேடு குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக 4 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 13.40 லட்சம் ரொக்கம் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி இபிஎப்ஓ மும்பை அலுவலகத்தில் 712 போலி பிஎப் ஆவணங்கள் மூலம் பிஎப் நிதியைப் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 18.97 கோடியாகும். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மூடப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்குச் சேர வேண்டிய நிதித் தொகையை இபிஎப்ஓ பணியாளர்கள் தெரிந்துகொண்டு அதற்காக போலியாக ஊழியர்கள் பெயரில் ஆவணங்கள் தயாரித்து பணத்தை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு கணக்கிலிருந்தும் சுமார் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரையிலான தொகை எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே போலியானவையாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டது போன்று போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT