Published : 13 Feb 2022 09:29 AM
Last Updated : 13 Feb 2022 09:29 AM

கர்நாடக மாநில அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில் தொழுகை நடத்திய மாணவர்கள்: அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

பெங்களூரு

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் முஸ்லிம் மாணவர்கள் வகுப்பறையில் தொழுகை நடத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி யுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரு வட்டாரத்தில் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிகளுக்கு ஹிஜாப்அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. இதனால் உயர்நிலை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேவேளையில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் தென் கன்னட மாவட்டம் கடபா அருகிலுள்ள அங்கதட்காவில் அரசு தொடக்கப் பள்ளியின் வகுப்பறைக்குள் முஸ்லிம் மாணவர்கள் சிலர் தொழுகை செய்யும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது.

இதுகுறித்து விசாரித்த போது கடந்த 4-ம் தேதி மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின்போது வகுப்பறையில் தொழுகை நடத் தியது தெரியவந்தது.

அதிகாரிகள் விசாரணை

இதுகுறித்து இந்து ஜாகர்ன வேதிகே அமைப்பினர் காவல் துறை மற்றும் கல்வித் துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று பள்ளிக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள், வகுப்பறைக்குள் மதச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வட்டார கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.

16-ம் தேதி வரை விடுமுறை

ஹிஜாப் போராட்டம் எதிரொலியாக கடந்த 9-ம் தேதி கர்நாடகாவில் உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பு மாணவர்களின் போராட்டம் முடிந்து கல்வி நிலையங்கள் அமைதியாக காணப்படுகின்றன. நேற்று மங்களூரு, உடுப்பி, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் கல்லூரிகளில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இந்நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதில் கல்லூரிகளை திற‌ப் பது குறித்தும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து பசவராஜ் பொம்மை வரும் 14-ம் தேதி முதல் உயர்நிலை பள்ளிகளை திறக்க உத்தரவிட்டார்.

மேலும் பி.யூ.கல்லூரி (11 மற்றும் 12-ம் வகுப்பு), பட்டய கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு வரும் 16-ம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து உத்தரவிட்டார். இதனால் திங்கட்கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x