Published : 11 Feb 2022 12:17 PM
Last Updated : 11 Feb 2022 12:17 PM

’காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போல் உ.பி. மாறினால்...’ - யோகிக்கு பதிலடிகளுடன் அணிவகுத்த தலைவர்கள்

’காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போல உத்தரப் பிரதேச மாறிவிடும்’ என்று பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா எனப் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில மக்களுக்கு வீடியோ மூலம் வாக்கு சேகரித்தார். அப்போது, "கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக அரசு, உங்கள் நம்பிக்கையை மனதில் வைத்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, அர்ப்பணிப்புடன் அனைத்தையும் செய்துள்ளது. ஐந்தாண்டுகளில் நிறைய நடந்துள்ளது. முதன்முறையாக அனைத்து கிராமங்களிலும் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

என் மனதில் உள்ள சில விஷயங்களை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். இந்த ஐந்து வருடங்களில் நமது மாநிலத்தில் நிறைய அற்புதங்கள் நடந்துள்ளன. இனிதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த ஐந்தாண்டு கால எனது முயற்சிக்கு, எனக்கு கிடைக்கும் ஆசீர்வாதமே உங்கள் வாக்கு. உங்கள் வாக்குதான் உங்கள் அச்சமற்ற வாழ்க்கைக்கு உத்தரவாதமாக இருக்கும்.

சில உத்தரப் பிரதேசத்தை கைப்பற்றி ஆட்சி அமைக்க முயல்கிறார்கள் என்பதுதான் ஒரே கவலை. அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலோ, வாக்கு செலுத்துவதில் இருந்து கொஞ்சம் தவறினால், இந்த ஐந்தாண்டுகள் நான் செய்த உழைப்புகள் கெட்டுவிடும். காஷ்மீர், கேரளா மற்றும் மேற்கு வங்கம் போல உத்தரப் பிரதேசம் மாறிவிடும்" என்று பேசியிருந்தார்.

அவமதிக்கக் கூடாது.. - இதற்கு தனது ட்விட்டர் வாயிலாக பதிலளித்து வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, "மாநிலங்களின், மக்களின், பல்வேறு மொழிகள், கலாச்சாரங்களின் கூட்டமைப்பே இந்தியா. இந்த ஆன்மாவை சிதைக்கக் கூடாது. இந்தியாவின் பன்முகத்தன்மையை அவமதிக்கக் கூடாது" என்றார்.

மம்தா, ஒமர், பினராயி கண்டனம்: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி, யோகியை நேரடியாக சுட்டிக் காட்டாவிட்டாலும் உ.பி.யை ஒப்பிடுகையில் தான் தனது மாநில ஏழை, எளிய மக்களின் நலனுக்காக அதிகம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேசத்தை ஒப்பிடுகையில் ஜம்மு காஷ்மீரில் எப்போதும் ஏழ்மை குறைவுதான். அங்கு மனித வளர்ச்சிக் குறியீடுகள் எப்போதும் சிறப்பாகவே இருந்துள்ளது. இங்கு குற்றங்களும் குறைவே. எப்படிப் பார்த்தாலும் உ.பி.யை விட ஜம்மு காஷ்மீரில் வாழ்க்கைத் தரம் சிறப்பாகவே இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி தனது ட்வீட்டில், "யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல் உத்தரப் பிரதேசம், கேரளாவாக மாறினால், மக்களால் சிறந்த கல்வி, சுகாதார சேவைகள், சமூக நலன், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை பெறமுடியும். மேலும், மதம் மற்றும் சாதியின் பெயரால் மக்கள் கொல்லப்படாத ஒரு நல்லிணக்கமான சமுதாயமாக மாறும். அதைத்தான் உத்தரப் பிரதேச மக்களும் விரும்புவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

கேரள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான வி.டி.சதீசன், "உத்தரப் பிரதேச மக்கள் அமைதிக்காக வாக்களிக்க வேண்டும். பன்முகத்தன்மையை, அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர், "உத்தரப் பிரதேசத்திற்கு காஷ்மீரின் அழகும், வங்கத்துக்கு கலாச்சாரமும், கேரளத்தின் கல்வியறிவும் ஒருசேர கிடைக்கப்பெற்றால் அதுவே அந்த மாநிலத்தின் பெரிய அதிர்ஷ்டம்" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "நம் மக்களை மதம், பிராந்தியம் ரீதியாக பிரிக்க வேண்டாம். பாஜகவுக்கு தனது சாதனைகளை சொல்லி வாக்குகேட்க முடியாததால் பிரிவினையை தூண்டி கேட்கிறது" எனக் கண்டித்துள்ளார்.

பினராயி ஏன் அமெரிக்கா சென்றார்? - யோகி ஆதித்யநாத்தின் பேச்சை பல்வேறு கட்சியினரும் விளாசி வர, கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன், "கேரளாவின் வளர்ச்சியைப் பற்றி பெருமை பேசும் முதல்வர் பினராயி விஜயன், தனது இருதய நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். "தீவிரவாத சக்திகளுக்கு எதிராக மாநில அரசு மிதமான கொள்கைகளைக் கடைபிடிப்பது ஏன்? மாநிலத்தில் கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது ஏன்?" என்ற கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x