Published : 09 Feb 2022 08:16 PM
Last Updated : 09 Feb 2022 08:16 PM
பெங்களூரு: ஹிஜாப் அணிவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடரபாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, "எல்லா உணர்ச்சிகளையும் ஒதுக்கி வையுங்கள். அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். அரசியலமைப்பு சட்டம் எனக்கு பகவத் கீதை போன்றது. அரசியலமைப்பு சட்டத்தின் மீது நான் சத்திய பிரமாணம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தின்படி நடப்பேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாணவர் சமூகம் அமைதியைப் பேண வேண்டும்" என்று கூறி வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "இந்த விஷயங்கள் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த சில அரசியலமைப்பு கேள்விகளை எழுப்புகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளின் விவாதத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் கூடுதல் அமர்வு அமைக்க வேண்டுமா என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது. அதன்படி, இந்த வழக்கை உடனடியாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் பரிசீலனைக்கு வைக்க பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று நீதிபதி தெரிவித்தார்.
அதேநேரம், கர்நாடக அரசின் ஒரே சீருடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதி 'இடைக்கால தடை விதிக்க முடியாது' என்று தெரிவித்தார்.
முன்னதாக, மனுதாரர்களில் ஒருவருக்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, "இந்த விவகாரம் கூடுதல் அமர்வுக்கு மாற்றப்படும் முன் நிவாரணமாக சீருடைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய மாணவர்களை ஒதுக்காதீர்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மாணவியும் கல்வியை இழக்காமல் இருக்கும் வழி குறித்து யோசிக்க வேண்டும். அதைவிட மிக முக்கியமாக அமைதி திரும்ப வேண்டும். எனவே, கர்நாடக அரசின் சீருடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
பின்புலம் என்ன?
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.
கடந்த வாரத்தில் மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால் மாணவிகள் 6-ம் நாளாக நேற்றும் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். இதனை கண்டித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டு அணிந்து 'ஜெய் பீம்'என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலோர கர்நாடகாவில் தொடங்கிய இந்த போராட்டம் நேற்று பாகல்கோட்டை, ஹாசன், மண்டியா, கோலார் ஆகிய மாவட்டங்களிலும் பரவியது. ஷிமோகாவில் உள்ள பாபுஜி நகரில் ஏபிவிபி மாணவ அமைப்பினர் முஸ்லிம் மாணவிகளை சூற்றிவளைத்து 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். மேலும் தேசிய கொடி கட்டும் கம்பத்தில் ஏறி, காவிக் கொடியை கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவ அமைப்பினர் கல்வீச்சிலும் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. இதனால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தனியாளாக முழக்கம்: ஹாசன் அரசு கல்லூரிக்கு நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை காவித் துண்டு அணிந்த ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். அந்தக் கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக 'அல்லாஹ் அக்பர்'என முழக்கம் எழுப்பிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால் டெல்லியில் உள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் ஆகியோரிடம் நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் பசவராஜ் பொம்மை, ‘‘கர்நாடகாவில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர், கர்நாடக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அடுத்த 3 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற வழிகாட்டுதல்கள், கர்நாடகாவில் நிலவும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீருடை விவகாரத்தில் முடிவெடுக்கப்படும்''என்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT