Published : 08 Feb 2022 06:50 AM
Last Updated : 08 Feb 2022 06:50 AM
புதுடெல்லி: நான்காம் கட்ட முழு வீச்சிலான இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தொடங்கி வைத்தார். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மூலம் தவிர்க்கக் கூடிய நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இந்திரதனுஷ் திட்டத்தை கடந்த 2014 டிசம்பரில் அப்போதைய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தொடங்கி வைத்தார். தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, போலியோ, தட்டம்மை, மஞ்சள்காமாலை, நிமோனியா காய்ச்சல், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நான்காம் கட்ட முழு வீச்சிலான இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “தடுப்பூசிக்கு உரியவர்களில் 90 சதவீதம் பேரை இத்திட்டம் சென்றடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். மத்திய அரசும் மாநிலங்களும் இதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும். குழந்தைகள் மற்றும் கர்ப் பிணிகளை பல்வேறு நோய்களில் இருந்து தடுப்பூசிகள் காக்கின்றன. இதற்கு முன்பு 43 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
தற்போது இது 76 சதவீதத்தை எட்டியுள்ளது. இதை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நமது பிரதமர் விரும்புகிறார். போலியோ மற்றும் பிற நோய்களில் இருந்து பச்சிளம் குழந்தைகளை பாதுகாத்து அவர்களின் எதிர்காலத்தை பாது காக்க மக்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு சொட்டு போலியோ தடுப்பு மருந்து ஓர் உயிரைக் காப்பாற்றும். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
ஆண்டுதோறும் 3 கோடிக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 2.6 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நாம் தடுப்பூசி செலுத்தி வருகிறோம். இதுதவிர 170 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன” என்றார். 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 416 மாவட்டங்களில் 3 சுற்றுகளாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT