Published : 07 Feb 2022 01:31 PM
Last Updated : 07 Feb 2022 01:31 PM
சண்டிகர்: கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் கைதியாக ஹரியாணா சுனாரியா சிறையில் உள்ள தேரா சச்சா தலைவர் ராம் ரஹீம் சிங்குக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, பஞ்சாப் தேர்தலை ஒட்டிய நகர்வாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஹரியாணா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா சிர்ஸா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளார். இந்த அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங், 2002 ஜூலை 10-ம் தேதி, சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து சிபிஐ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில், ‘‘தேரா சச்சா அமைப்பில் பெண் சிஷ்யைகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக மேலாளர் ரஞ்சித் சிங் கடிதம் மூலம் வெளியில் பரப்பியதாக குர்மீத் ராம் ரஹீம் சந்தேகித்துள்ளார்.அதனால் ரஞ்சித்தை கொல்ல குர்மீத் திட்டமிட்டுள்ளார்’’ என்று குறிப்பிட்டது.
இவ்வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் அவரது கூட்டாளிகள் கிருஷ்னண் லால், ஜஸ்பிர் சிங், அவ்தார் சிங், சப்தில் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், ராம் ரஹீமுக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என பாஜக, அதுவும் குறிப்பாக அண்டை மாநிலமான ஹரியாணாவில் ஆட்சியில் உள்ள பாஜக முனைப்புடன் உள்ளது.
இந்நிலையில் தான் ராம் ரஹீம் சிங்குக்கு 21 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
காரணம், பஞ்சாபின் மால்வா பகுதியில் ராம் ரஹீம் சிங்கின் தேராவைப் பின்பற்றுபவர்கள் ஏராளமானோர் உள்ளதாகவும், அவர்களின் வாக்குகள் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.
அதேப்போல் பஞ்சாபில் உள்ள இதுபோன்ற சிற்சில தேராக்களின் தலைவர்களுக்கு மக்கள் மீது ஆதிக்கம் இருப்பதால் காங்கிரஸ், பாஜக, அகாலி தளம் என அனைத்துக் கட்சியினரும் தேரா தலைவர்களை சரிகட்ட முயற்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT