Published : 07 Feb 2022 11:32 AM
Last Updated : 07 Feb 2022 11:32 AM

யாரேனும் ஏதாவது கோபத்தில் பேசுவதெல்லாம் இந்துத்துவம் ஆகிவிடாது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விமர்சனம்

நாக்பூர்: யாரேனும் ஏதாவது கோபத்தில் பேசுவதெல்லாம் இந்துத்துவக் கொள்கை ஆகிவிடாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

இந்துத்துவமும் தேசிய ஒருமைப்பாடும் என்ற தலைப்பில் லோக்மத் மீடியா ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

நாக்பூர் லோக்மத் பத்திரிகை பொன்விழா கொண்டாடியது. அதன் ஒருபகுதியாக நேற்று நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது:
அண்மையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்ம சன்சத் என்ற தலைப்பில் நடந்த இந்து மாநாட்டில் பேசப்பட்ட சில கருத்துகள் சர்ச்சையாகியுள்ளன. அவை நிச்சயமாக இந்து வார்த்தைகள் அல்ல. இந்துவின் செயல்பாடும் அல்ல இந்து மதத்தின் ஆன்மாவும் அல்ல. எங்கேயாவது யாராவது கோபத்தில் ஏதாவது பேசுவதை எல்லாம் இந்துத்துவா என்று எடுத்துக் கொள்ள முடியாது. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவாக் சங்கமும், இந்துத்துவாவை பின்பற்றுபவர்களும் தர்ம சன்சத் பேச்சை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வீர சவர்கர் கூட, இந்து சமூகம் ஒன்றிணைந்து அமைப்புக்குள் வரும்போது அது பகவத் கீதம் பற்றிதான் பேசுமே தவிர யாருடைய கதையை முடிப்பதைப் பற்றியோ அல்லது யாரையும் காயப்படுத்துவது பற்றியோ பேசாது என்றே கூறியிருக்கிறார்.

இந்தியா, இந்து ராஷ்டிரம் கொள்கையை செயல்படுத்திவிட்டதா என்று கேட்டீர்கள் என்றால். அது இந்தியாவை இந்து தேசமாக மாற்றுவதில் மட்டுமில்லை என்பேன். ஏனெனில் யாரும் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் இந்தியா இந்து தேசம் தான். நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கூறு இந்துத்துவம் சார்ந்ததே.

தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த எல்லாமே ஒரே சீராக இருக்க வேண்டுமென்பதில்லை. வித்தியாசமாக இருக்கிறது என்பதால் பிரிந்து கிடக்கிறது என்று அர்த்தமில்லை.

ஆர்எஸ்எஸ் மக்களைப் பிரிக்கவில்லை. மாறாக பல்வேறு வித்தியாசங்களையும் களைய முற்படுகிறது.

இவ்வாறு மோகன் பாகவத் கூறியுள்ளார்.

அண்மையில் சத்தீஸ்கரில் நடந்த தர்ம சன்சத் நிகழ்ச்சியில் பேசிய காலிச்சரண் மஹாராஜ், தேசப்பிதா மகாத்மா காந்திக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த டிசம்பரில் உத்தரகாண்டின் ஹரித்வாரில் நடந்த தர்ம் சன்சத் நிகழ்ச்சியிலும் சில பேச்சுக்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவது போல் இருப்பதாகக் கூறி ஐபிசி 153ஏ பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இந்தப் பின்னணியில் தான், யாராவது ஏதாவது கோபத்தில் பேசுவதெல்லாம் இந்துத்துவா ஆகிவிடாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x