Published : 07 Feb 2022 10:45 AM
Last Updated : 07 Feb 2022 10:45 AM

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்டான #BoycottHyundai: ஹூண்டாய் மோட்டார் இந்தியா விளக்கம்

காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் டீலர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் வைரலான நிலையில் அது குறித்து விளக்கமளித்துள்ளது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்.

முன்னதாக @hyundaiPakistanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதியப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு எதிரான குரல் வலுத்தது.
இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஒரு விளக்கத்தை நல்கியுள்ளது. அந்த விளக்க அறிக்கையை தனது அதிகாரபூர்வ சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ஹூண்டாய் மோட்டார் இந்தியா, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சந்தைக்கு உண்மையாக இருக்கிறது. இந்திய தேசியவாத கொள்கையை மதிப்பில் நாங்கள் இதுவரை உறுதியுடன் இருக்கிறோம். ஹூண்டாய் பிராண்டுக்கு இந்தியா இரண்டாவது வீடு என்றே சொல்வோம். உணர்வற்ற சில கருத்து எங்கள் பெயரில் பகிரப்பட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் எப்போதும் இதுபோன்ற விஷயங்களில் துணியும் சகிப்புத்தன்மை காட்ட மாட்டோம். @hyundaiPakistanOfficial வெளியான கருத்தினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின் இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

— Hyundai India (@HyundaiIndia) February 6, 2022

இந்தியாவில் 2028க்குள் எலக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டுவரும் முனைப்பில் கடந்த டிசம்பர் 2021ல், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவில் ரூ.4000 கோடி முதலீடு செய்யும் திட்டத்தை அறிவித்தது.

தென் கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் 1967ல் தொடங்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. இதன் கிளைகளில் 1,20,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x