Published : 07 Feb 2022 09:32 AM
Last Updated : 07 Feb 2022 09:32 AM

'பிராமின் என்பது சாதியல்ல; உயர்ந்த வாழ்க்கை முறை' - உ.பி. துணை முதல்வர் விளக்கம்

லக்னோ: 'பிராமின் என்பது சாதியல்ல அது ஒருவகை உயர்ந்த வாழ்க்கை முறை' என உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் வரும் 10 ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

ஞாயிறு இரவு ஜேவார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கவுதம் புத் நகரின் ஜேவார் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா பேசியதாவது:

நான் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். நான் எங்கு சென்றாலும் என்னிடம் பிராமண சாதி தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ஒருவர் என்னிடம் பிராமணர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் பாஜகவின் பார்வை அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி. இதில் பிராமணர், குஜ்ஜார், ஜாட் என்ற பேதமெல்லாம் இல்லை. ஒவ்வொரு சாதிக்கும் தனி மாண்பு உண்டு. அதனால் தான் உ.பி.யில் பாஜகவுக்கு எல்லா சாதியினரும் ஆதரவு தருகின்றனர். அந்த ஆதரவு பன்மலர் கொண்ட பூங்கொத்து போன்றது.

அதேவேளையில் என்னை பிராமணர் என்று அடையாளப்படுத்தும்போது நான் அதை மறுப்பதில்லை. ஆம் நான் பிராமணர் தான். அதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்றே கூறுவேன்.

ஒரு பிராமணரின் வேலை, அடுத்தவரின் மகிழ்வில் மகிழ்ச்சி காண்பதே. நான் தொழில்முறையில் ஓர் ஆசிரியர். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் அனைவருமே பிராமணர்களாகப் பார்க்கப்பட்டனர். ஏனெனில் ஆசிரியர்கள் அடுத்தவர் நலனுக்காக வேலை செய்பவர்கள். சாதி கடந்து ஆசிரியர்கள் இறைவனாகவே கருதப்பட்டனர்.

பிராமணம் என்பது சாதியல்ல அது ஒரு உயர்ந்த வாழ்க்கை முறை. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதனுக்கான நற்பலன்கள் கிடைக்க பூஜைகள் செய்பவர்கள் தான் பிராமணர்கள்.

இது என்னுடைய விளக்கம் மட்டுமல்ல பிரதமரின் பார்வையும் இதுதான். பாஜக பிற்படுத்தப்பட்ட மக்கள், ஜாட், குஜ்ஜார், தாக்கூர், வைஷ்யா என அனைவரின் நலனுக்காகப் பாடுபடுகிறது. பாஜகவில் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக, எம்எல்ஏ.,க்களாக, எம்.பி.க்களாக இருக்கின்றனர்.

அலிகர், லக்னோவில் பிரச்சாரம் செய்தபோது முஸ்லிம் சமூகத்தினரும் பாஜகவை ஆதரித்தது மகிழ்ச்சியளித்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜேவார் தொகுதியில் பாஜக சார்பில் தீரேந்திரா சிங் போட்டியிடுகிறார். வரும் 10 ஆம் தேதி இத்தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x