Published : 05 Feb 2022 06:55 PM
Last Updated : 05 Feb 2022 06:55 PM

ஹைதராபாத்தில் பிரமாண்ட ராமானுஜர் சிலை திறப்பு: பிரதமர் மோடி பங்கேற்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடிஉயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

ரூ.1,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆஸ்ரமத்திற்கு தற்போது தெலங்கானா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேத பண்டிதர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தன்னார்வலர்கள் சேவை செய்ய திரண்டு வருகின்றனர். இதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இங்கு தொண்டு செய்ய வந்துள்ளனர். பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவிற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹைதராபாத் நகருக்கு விமானம் மூலம் வந்தார். ஆனால் பிரதமரை வரவேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையம் வரவில்லை.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் ஹைதராபாத்தில் உள்ள வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICRISAT) 50வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவருடன் ஆளுநர் தமிழிசையும் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் சிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர் ஆராதனையில் பங்கேற்ற பிறகு ஆலயத்தை பார்வையிட்டார். பத்ரிநாத், அயோத்தி, திருப்பதி உள்ளிட்ட 108 விஷ்ணு கோவில்களின் பிரதிகள் அந்த கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதனை அவர் பக்தி பரவசத்துடன் பார்வையிட்டதுடன் பூஜை நடக்கும் இடத்தில் அமர்ந்து பங்கேற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x