Last Updated : 05 Feb, 2022 07:46 AM

1  

Published : 05 Feb 2022 07:46 AM
Last Updated : 05 Feb 2022 07:46 AM

குடியரசு தலைவர் தேர்வில் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு முக்கியத்துவம்: எதிர்க்கட்சிகள் ஆதரவில் பொது வேட்பாளர் சாத்தியமா?

புதுடெல்லி: ஜுலையில் நடைபெற உள்ள புதிய குடியரசு தலைவர் தேர்வில் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு ஆளும் பாஜக மறுவாய்ப்பை இழந்தால் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் வரும் ஜுலை மாதம் 19-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் அப்பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தி புதிய குடியரசு தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். இத்தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளின் சுமார் 776 எம்.பி.க்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் உறுப்பினர்கள் சுமார் 4,120 பேர் வாக்களிப்பார்கள். குடியரசுதலைவர் தேர்தலில், மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலங்களின் எம்எல்ஏ, எம்.பி.க்களின் வாக்குகளுக்கு கூடுதல் மதிப்பு உள்ளது.

தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக.வுக்கு போதுமான எம்.பி.க்கள் பலம் உள்ளது. ஆனால், தலா 8 மாநிலங்களில் தனி ஆட்சியும், கூட்டாட்சியும் கொண்ட எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை 5 மாநில சட்டப்பேரவை தேர்தலால் மாறும் வாய்ப்புகள் உள்ளன. சுமார் 9 மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளும், 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும் நடைபெறு கிறது. இதனால், தற்போது 7 கட்டங்களாக நடைபெறும் உ.பி. சட்டப்பேரவை தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முக்கிய பங்கு

இங்கு மொத்தம் 403 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதனால், இங்கு ஆட்சி அமைக்கும் கட்சி அதிக மதிப்பு கொண்ட வாக்குகளுடன், குடியரசு தலைவர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறாவிட்டால், புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதில் எதிர்கட்சிகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் பிராந்தியக் கட்சிகள் பெரும்பான்மை வகிப்பதால், அவர்களிடம் இப்போது முதலே குடியரசு தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்க தொடங்கி விட்டனர்.

இதுகுறித்து ’இந்து தமிழ்’ நாளிதழிடம் விடுதலை சிறுத்தை கள் கட்சி பொதுச் செயலாளரும் திமுக.வின் மக்களவை எம்.பி.யுமான டி.ரவிகுமார் கூறும் போது, ‘‘எதிர்க்கட்சிகள் சார்பில்பொது வேட்பாளராக ஒரு தமிழரை தேர்ந்தெடுத்து போட்டியிட வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும்.

கடந்த முறை இந்த தேர்தலில் அதிக எம்எல்ஏ, எம்.பி.க்களை வைத்திருந்தும் அதிமுக தம் வாக்குகளை பாஜக.விடம் ஒப்படைத்து விட்டது. வரும் 2024 பொதுத் தேர்தல், 2026 தொகுதி மறுசீரமைப்பு என இந்திய அரசியலமைப்பு திசையை தீர்மானிக்கும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அப்போது, பாஜக.வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் குடியரசு தலைவராகவோ, துணை குடியரசு தலைவராகவோ வருவதை தடுக்க வேண்டும்’’ என்றார்.

30 புதிய எம்.பி.க்கள்

இதற்கிடையில், குடியரசு தலைவர் தேர்தலுக்கு முன்பாக மாநிலங்கவைக்கு 30-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்வாக உள்ளனர். இதன் தாக்கமும் அந்த தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும். பாஜக.வை பொறுத்த வரை யாரும் எதிர்பார்க்காத வகையில் ராம்நாத் கோவிந்த் தேர்வானது போல், புதிய குடியரசு தலைவர் இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட்டின் முதல் பெண் மற்றும் பழங்குடி ஆளுநராக கடந்த ஆண்டு தன் பதவிக் காலத்தை முடித்த திரவுபதி முர்முர்வுக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

எதிர்க்கட்சிகளில் அப்பதவிக்கு கடந்த தேர்தல் முதல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தீவிரமாக முயற்சிக்கிறார். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரான சரத் பவார், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தவர். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருப்பவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்களுடன் அதிக நெருக்கம் உள்ளது. எனவே, தன் பெயரை பரிந்துரைக்க காங்கிரஸ் கட்சியும் மறுப்பு தெரிவிக்க வாய்ப்புகள் குறைவு என சரத்பவார் கருதுகிறார்.

துணை குடியரசு தலைவர்

ஜூன் மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் புதிய துணை குடியரசு தலைவரும் அடுத்த சில மாதங்களில் தேர்வாக உள்ளார். எதிர்க்கட்சிகளால் குடியரசு தலைவர் தேர்வானால், துணை குடியரசு தலைவராக எதிர்க்கட்சிகள் விரும்பும் நபர் தேர்வாகும் வாய்ப்புகள் உள்ளன. இப்பதவிக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சிலரது பெயர்களும் அடிபடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x