Published : 04 Feb 2022 04:45 PM
Last Updated : 04 Feb 2022 04:45 PM
கோரக்பூர்: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக 300 சீட்களுக்கும் மேல் கைப்பற்றும் என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் இன்று (வெள்ளிக்கிழமை) கோரக்பூர் தொகுதியிலிருந்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமித் ஷாவும் சென்றார்.
முன்னதாக பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், "இந்த முறையும் உத்தரப்பிரதேசத் தேர்தலில் நாம் வரலாறு படைக்கப் போகிறோம். 2014, 2017, 2019 என உ.பி. மக்கள் தொடர்ந்து தேர்தல்களில் வளர்ச்சிப் பாதையைத் தேர்வு செய்து பிரதமர் மோடியின் தலைமைக்கு பெரும்பான்மை அளித்துள்ளனர். இன்று யோகி ஆதித்யநாத் மனு தாக்கல் செய்கிறார். நாம் 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறப்போகிறோம்.
2013 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோது இங்குள்ள பத்திரிகையாளர்கள் என்னிடம் இரண்டு இலக்க இடங்களைக் கைப்பற்ற முடியாது இடத்திற்கு கட்சித் தலைமை உங்களை அனுப்பியுள்ளதே என்று கேள்வி எழுப்பினர். ஆனால், அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி தான் இரண்டு இலத்தில் நின்றது. பிரதமர் மோடியின் உஜ்வாலா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் திட்டம், கரோனா தடுப்பூசித் திட்டம் ஆகியனவற்றால் உ.பி. மக்கள் பலனடைந்துள்ளனர். அதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் பாஜகவை ஆதரிக்கின்றனர்.
பிரதமர் அறிவித்த அத்தனை நலத்திட்டங்களும் ஏழை, எளியோரை சென்று சேர்வதை யோகி ஆதித்யநாத் உறுதி செய்துள்ளார்.
யோகி ஆதித்யநாத், நல்லாட்சியை நல்கி வருகிறார். 2019 மக்களவைத் தேர்தலில் 65 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்தும் கூட தோற்றுதான் போனார்கள். 2017 தேர்தலில் நமக்கு 403 தொகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியளித்தனர். இந்த முறையும் நாம் 300க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றப் போகிறோம்" என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT