Published : 04 Feb 2022 01:25 PM
Last Updated : 04 Feb 2022 01:25 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முக்கிய உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, "மத்திய அரசு, வரலாற்றை மாற்ற நினைக்கிறது. அதற்கு தங்களின் எதிர்காலத்தை நினைத்துப் பயம் வந்துவிட்டது. நிகழ்காலத்தை இந்த அரசு நம்பவில்லை" என்று பேசினார்.
அவரது பேச்சின் இடையே குறுக்கிட்ட மக்களவை துணைத் தலைவர் ரமா தேவி, "அன்புடன் பேசுங்கள். இவ்வளவு கோபம் வேண்டாம்" என்று கூறினார்.
அப்போது விளையாட்டாக அதை எதிர்கொண்ட மொய்த்ரா, கவிஞர் ராம்தாரி சிங் தின்கர் கவிதை ஒன்றை நினைவூட்டினார். "இந்த உலகம் சகிப்புத்தன்மை, மன்னிப்பு, இரக்கம் ஆகியவற்றைக் கொண்டாடும். ஆனால் எப்போது அவற்றின் பின்னால் அதிகாரத்தின் பிம்பம் இருக்கிறதோ அப்போது அவற்றைக் கொண்டாடும்" என்ற வரிகளை மேற்கோள் காட்டினார்.
பின்னர், "நாங்களும் மன்னிப்பையும், சகிப்பத்தன்மையையும் கடைப்பிடிப்போம். ஆனால், கொஞ்சம் அதிகார நெடியும் இருக்கும்" என்றார்.
இந்த உரை முடிந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் ட்விட்டரில் மொய்தா மக்களவை துணைத் தலைவர் ரமா தேவியைக் கடுமையாக விமர்சித்தார்.
நீங்கள் நல்லொழுக்கப் பாட ஆசிரியர் இல்லை.. அதில் அவர், "எனக்கு மக்களவை சபாநாயகர் 13 நிமிடங்களைப் பேசுவதற்காக வழங்கினார். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லாவை அவருடைய சேம்பருக்கே சென்று சந்தித்தேன். ஏன் எனக்கு வெறும் 13 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன என வினவினேன். நான் இருக்கையில் இல்லை. துணைத் தலைவர் தான் இருந்தார். அவர் தான் பொறுப்பு சபாநாயாகர். அதனால் நான் அதற்குப் பொறுப்பாக முடியாது என்றார். மேலும் வலியுறுத்தவே, நான் 13 நிமிடங்களாவது அளித்தது எனது பெருந்தன்மை என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நான் அன்புடன் பேச வேண்டுமா அல்லது கோபத்துடன் பேச வேண்டும் என்றெல்லாம் எனக்கு வகுப்பெடுக்க இவர்கள் யார்? இவர்கள், எனக்கு அவை விதிகள் பற்றி மட்டுமே திருத்தங்களைச் சொல்லலாம். மற்றபடி பாடம் எடுக்க நீங்கள் ஒன்றும் நல்லொழுக்க ஆசிரியர் அல்ல'' என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT