Published : 04 Feb 2022 01:21 PM
Last Updated : 04 Feb 2022 01:21 PM
புதுடெல்லி: பிப்ரவரி மாதத்திற்குள் 50 லட்சம் பயன்படுத்தப்படாத கோவிஷீல்ட் டோஸ்கள் வீணாகிவிடும் என்று சில ஊடங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள ஏராளமான தனியார் மருத்துவமனைகளில் சுமார் 50 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்துகள் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத் தொடக்கத்தில் பயன்படுத்தப்படாமலேயே காலாவதியாகும் அபாயம் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இது தொடர்பாக இந்திய மருத்துவக் கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இந்தநிலையில் இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தமட்டில் மானிய விலையிலோ அல்லது பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழோ தடுப்பூசி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை முயற்சி செய்யலாம் என்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட மாநிலங்களின் கோரிக்கையின் பேரில், தடுப்பூசி காலாவதியாகாமல் இருக்கவும், வீணாதலை தவிர்க்கவும் தனியார் துறை சுகாதார வசதிகளிலிருந்து மாநில அரசு சுகாதார வசதிகளுக்கு விதிவிலக்கு அடிப்படையில் தடுப்பூசிகளை மாற்றும் ஏற்பாட்டிற்கு ஆட்சேபனை இல்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியது. இது குறித்த தகவல்கள் கோவின் டிஜிட்டல் தளத்தில் கிடைக்கின்றன.
இது தவிர, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா , குஜராத் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, தனியார் கோவிட் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT