Published : 04 Feb 2022 10:44 AM
Last Updated : 04 Feb 2022 10:44 AM

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர்: விவாதத்துக்கு அனுமதி கோரி திமுக எம்.பி.க்கள் அமளி, வெளிநடப்பு

புதுடெல்லி: நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். விவாதத்துக்கு அவைத் தலைவர் அனுமதியளிக்காத நிலையில் அவையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரம் தொடங்கியவுடன், அதை ஒத்திவைத்துவிட்டு நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர்.

திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, வில்சன், எம்.சண்முகம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரின் கோரிக்கையை வெங்கய்ய நாயுடு நிராகரித்தார். இதனையடுத்து திமுக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக விவாதத்துக்கு அனுமதி கோரி முழங்க வெங்கய்ய நாயுடுவோ, ''பூஜ்ஜிய நேரத்தை தடுக்க வேண்டாம். அலுவல்கள் வழக்கம்போல் நடக்கட்டும். 11.30 மணிக்கு மேலோ அல்லது 12.30 மணிக்கோ இதுபற்றி விவாதிக்கலாம்'' என்றார்.

ஆனால், அவையில் கூச்சல், குழப்பம் ஓயவில்லை. ''நீங்கள் என்ன செய்தாலும் அனுமதியில்லை'' என்று வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாகக் கூறிவிட்டு வழக்கம்போல் பட்டியலிட்ட அலுவல்களை நடத்தினார்.

இதனால் அதிருப்தியடைந்த திமுக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, "தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை நேற்று அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். இதனை எதிர்த்தே நாங்கள் இன்று அமளியில் ஈடுபட்டோம். பூஜ்ஜிய நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதத்திற்கு அனுமதி கோருவது மரபு மீறிய செயல் ஒன்றுமில்லை. வழக்கமான நடவடிக்கையே. ஆனால் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வெளிநடப்பு செய்துள்ளோம். தமிழக அரசுக்கு ஆளுநர் மீது தனிப்பட்ட விரோதம் இல்லை. அவரை இரண்டு முறை எங்களின் தலைவர் நேரில் சென்று சந்தித்துள்ளார். ஆனால், நீட் விலக்கு மசோதாவை நேற்று அவர் திருப்பியனுப்பியுள்ளார். மேற்குவங்கம், கேரளா, தமிழகம், பிஹார் என எங்கெல்லாம் பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ஆளுநர்கள் பிரச்சினைக்குரியவர்களாக இருக்கின்றனர்.
இன்று எங்களுக்கு ஆதரவாக அவையில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்" என்று கூறினார்.

திருப்பி அனுப்பப்பட்ட மசோதா: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.

அதனடிப்படையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது. பின்னர், நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்கான சட்ட ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அக்குழு சமர்ப்பித்தது.

தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த செப்.13-ம் தேதி சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. பாஜக தவிர்த்து, மற்ற அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக அரசுக்கே நேற்று (வியாழக்கிழமை) திருப்பி அனுப்பினார், ஆளுநர் ஆர்.என்.ரவி.

மேலும், இது தொடர்பான ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில், நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்கள் மீதான பொருளாதார சுரண்டலைத் தடுக்கக் கூடியதென்றும், சமூக நீதியை முன்னெடுத்துச் செல்லவும், நீட் தேர்வின் தேவையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராகுல், மொய்த்ராவின் ஆதரவுக் குரல்கள் காரணமா? முன்னதாக நேற்று முன் தினம் மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, நீட் விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் மீண்டும், மீண்டும் கோரிக்கை எழுப்ப அதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றார். அதேபோல், நேற்று மக்களவையில் பேசிய திரிணமூல் எம்.பி.யும் நீட் விவகாரம் பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மகோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பினார் என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியது தொடர்பாக நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x