Published : 04 Feb 2022 08:11 AM
Last Updated : 04 Feb 2022 08:11 AM

ராமானுஜர் சிலையை நாட்டுடமையாக்க பிரதமர் மோடி நாளை ஹைதராபாத் வருகை

இரவில் ‘லேசர் ஷோ’ விளக்கொளியில் மின்னும் ராமானுஜர் சிலை.

ஹைதராபாத்: சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த ராமானுஜரின் 216 அடி உயர பஞ்சலோக சிலையை நாளை ஹைதராபாத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் ராமானுஜரின் 216 அடி உயர பஞ்சலோக சிலை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை லட்சுமி நாராயண யாகம் நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

கம்பீரமான ராமானுஜரின் பஞ்ச லோக சிலை மற்றும் ஆசிரமத்தின் சுற்றுப்புறம் முழுவதும் இரவில் மின்னும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் இரவு 7 மணிக்கு ராமானுஜரின் சிலை மீது ஸ்வீடன் நாட்டின் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘லேசர் ஷோ’வின் விளக்கொளியில் அங்கு வரும் பக்தர்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 187 அடி தூரத்தில் புரொஜக்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிவரும் ஒளியை பொருத்து சங்கீதமும் ஒலிக்கும் வகையில் இந்த ‘லேசர் ஷோ’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமானுஜரின் சிலையை நாளை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுடமையாக்க உள்ளார். இதற்காக அவர் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், மாலை 5 மணிக்கு ராமானுஜரின் திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் இரவு 7 மணியளவில் ஹைதராபாத்திலிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி விழா நடைபெறும் ஆசிரமம் மற்றும் விமான நிலையம், ஆசிரமத்திற்கான வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x