Published : 03 Feb 2022 06:43 PM
Last Updated : 03 Feb 2022 06:43 PM

உ.பி.யில் பரபரப்பு: ஓவைசி வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு... யாருக்கும் காயமில்லை

டெல்லி: ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி வாகனத்தைக் குறிவைத்து உத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடித்துவரும் வழியில் அவரின் வாகனத்தை மர்ம நபர்கள் சுட்டுள்ளனர். எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

பாஜகவின் செயல்பாடுகள் மீது கடுமையான விமர்சனம் வைப்பவர் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி. பீகாரில் பெற்ற கவனிக்கத்தக்க சில வெற்றிக்கு பிறகு, இப்போது உத்தரப் பிரதேச தேர்தலிலும் தனது கட்சியை களமிறக்கியுள்ளார். அம்மாநிலத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 20 சதவீத இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து களமிறங்கியுள்ள ஓவைசி, அதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இன்று மீரட் பகுதியில் உள்ள கிதாவுரில் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். பிரச்சாரத்தை முடித்து டெல்லி திரும்பிய அவரின் வாகனத்தில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்தபோது சாஜர்சி டோல் பிளாசா அருகே அவரது வாகனத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று நான்கு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஓவைசி சென்ற காரின் டயர்கள் பஞ்சர் ஆனதாக தெரிகிறது. இந்த சம்பவத்துக்கு டோல் பிளாசா அருகே அந்தக் காரை விட்டுவிட்டு, மற்றொரு காரில் டெல்லிக்கு தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பேசியுள்ள ஓவைசி, "மீரட்டின் கிதாவுரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து டெல்லிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். சாஜர்சி சுங்கச்சாவடி அருகே வந்தபோது இரண்டு பேர் எனது வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் 3, 4 ரவுண்டுகள் சுட்டனர். அவர்கள் மொத்தம் 3 அல்லது 4 பேர் இருந்தனர். துப்பாக்கிச்சூட்டால் எனது வாகனத்தின் டயர்கள் பஞ்சராக, மாற்று வாகனத்தில் டெல்லி செல்கிறேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x