Published : 03 Feb 2022 02:43 PM
Last Updated : 03 Feb 2022 02:43 PM
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் மாநிலத்தின் பொருளாதாரம் 6-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம் தேதி வரை நடக்கிறது. தேர்தலையொட்டி அங்கு கட்டுப்பாடுகளுடன் பிரச்சாரம் நடைபெறுகிறது. பெருமளவில் காணொலி மூலமாகவும், வெர்ச்சுவல் பிரச்சாரமும் களைகட்டி வருகின்றன. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் உ.பி.யில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் லக்னோவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: "உத்தரப் பிரதேசத்தில் முன்பு ஆண்டு அரசுகள் மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மேலும் தற்போதைய பாஜக ஆட்சியானது மாநிலத்தின் பொருளாதாரத்தை 6-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு உயர்த்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் கலவரங்கள் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் எதுவும் இல்லை .
1947 முதல் 2017 வரை உ.பி.யின் பொருளாதாரம் 6வது, 7வது இடத்தில் (நாட்டில்) இருந்தது. 70 ஆண்டுகளாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஆனால் வெறும் 5 ஆண்டுகளில், உ.பி.யின் பொருளாதாரம் 2-வது இடத்தை எட்டுவதற்கு நாங்கள் வெற்றிகரமாக உதவியுள்ளோம்.
அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும், கூட்டு ரோந்து பணியை தொடங்க பெண் போலீஸாரை நியமித்த முதல் மாநிலம் உ.பி. கடந்த 5 ஆண்டுகளில் கலவரங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லாத முதல் மாநிலம் இதுவாகும். மேலும், வழக்கு விசாரணையில் விரைவுபடுத்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் மாநிலம் இதுவாகும்.
கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வதில் எங்கள் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT