Published : 03 Feb 2022 12:25 PM
Last Updated : 03 Feb 2022 12:25 PM

பாக். - சீனாவை கூட்டாளிகள் ஆக்கியதா பாஜக? -  ராகுலுக்கு வரலாற்று பாடம் சொல்லிக் கொடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: "ராகுல் காந்திக்கு வரலாறு தெரியவில்லை. அதை நான் எடுத்துச் சொல்கிறேன்" என்று சீனா, பாகிஸ்தான் உறவு பற்றிய ராகுல் காந்தியின் கருத்துக்கு ட்விட்டரில் எதிரிவினையாற்றியுள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.

"இந்தக் குடியரசு தின விழாவிற்கு ஒரு விருந்தினரை அழைத்துவர முடியவில்லை. அது ஏன் என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். நாம் தனித்து விடப்பட்டுள்ளோம். உங்களின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் சீனாவையும், பாகிஸ்தானையும் கூட்டாளிகளாக்கியுள்ளது. இதுதான் தேசத்திற்கு எதிராக நீங்கள் செய்த மிகப்பெரிய குற்றம். இந்திய மக்களுக்கு எதிரான குற்றம். நீங்கள் அலட்சியமாக மாயையில் இருக்காதீர்கள். எதிரிகளின் பலத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்" என்று நேற்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய வார்த்தைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளால் பாகிஸ்தானும், சீனாவும் நட்பாகிவிட்டதாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியிருக்கிறார். அவருக்கு நான் வரலாறு சொல்லிக் கொடுக்கிறேன். 1963-ல், பாகிஸ்தான் சட்டவிரோதமாக சக்‌ஷ்கம் பள்ளத்தாக்கை சீனாவிடம் ஒப்படைத்தது. 1970- களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா காரகோரம் நெடுஞ்சாலையை அமைத்தது. 1970-ம் ஆண்டுதொட்டே இரண்டு நாடுகளும் அணு ஆயுத ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகின்றன. 2013-ல், சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் உருவாக்கப்பட்டது. இவையெல்லாம் நடந்த காலத்தில் மத்தியில் யார் ஆட்சி நடந்தது என்று ராகுல் காந்தி எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போது சீனாவும், பாகிஸ்தானும் எதிரிகளாக விலகியிருந்தனரா என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், குடியரசு தினவிழாவின்போது வெளிநாட்டுத் தலைவர்கள் யாரையும் விருந்தினராக அழைக்க முடியவில்லையே என்ற ராகுலின் விமர்சனத்திற்கு, "நாம் கரோனா அலையின் நடுவில் இருந்தோம். இந்தியாவில் இருப்பவர்களுக்கு அது தெரியும். நீங்கள்தான் வெளிநாடு சென்றுவிட்டீர்களே! கரோனா அலை காரணமாகத் தான் ஐந்து மத்திய ஆசிய நாடுகளுடனான உச்சி மாநாட்டை கூட நாம் இணையவழியில் நடத்தினோம்" என்று பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x