Last Updated : 03 Feb, 2022 12:46 PM

13  

Published : 03 Feb 2022 12:46 PM
Last Updated : 03 Feb 2022 12:46 PM

மோடி அரசின் சாதனைகளை காங்., திமுக எண்ணிப் பார்க்கவேண்டும்: ரவீந்திரநாத் எம்.பி-யின் நாடாளுமன்ற உரை

புதுடெல்லி: "பல்வேறு சாதனைகளை பாஜக அரசு புரிந்துள்ளது. காங்கிரஸ், திமுக இயக்கங்கள் இதனை எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைப் பாராட்டி ரவீந்திரநாத் எம்.பி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தேனி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான பா.ரவீந்திரநாத் பேசியது: "நமது தாய்த் திருநாடு ஆன்மீகமும் தத்துவமும் தழைத்த நாடு. நமது நாடு செயல்திறன் மிக்கதாக இருந்து வந்திருப்பதை நமது இனத்தின் வரலாறு காட்டுகிறது. அதை நமது பிரதமர் மோடி நமதுடைய நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி கொண்டு வருகிறார்.

நாம் முன்றாம் ஆண்டு கரோனா வைரஸ் தாக்கத்தில் இருக்கிறோம். அதேநேரம் நமது இந்தியா 75 வது சுதந்திர ஆண்டு ‘அம்ரித் மகோத்சவ்’ கொண்டாடி கொண்டிருக்கிறோம். நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களையும், வீரர்களையும், தியாகிகளையும் இந்த நேரத்தில் நான் தலைவணங்கி மரியாதையோடு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெற்றுள்ள அடுத்த 25 வருடத்தில் ‘அமித் மகோத்சவ்’ மூலமாக ’சப்கே சாத் சப்கா விகாஸ், சப்கா பிரயாஸ்’ என்ற மந்திரத்தோடு இந்தியா அனைத்து வளர்ச்சியும், மக்கள் அனைத்து முன்னேற்றம் அடையும். உலக அரங்கில் வலிமையான நாடாக மாற்றப்படும் என்பதே லட்சியம் என்று அறிவித்ததை நான் மனபூர்வமாக வரவேற்கிறேன். 180 நாடுகளுக்கு மேலாக நமது இந்திய தயாரிப்பு மருந்துகளை பயன்படுத்துகிறது. இது நமது மருந்தியல் துறையின் மிகப்பெரிய புரட்சியாகும்.

தனிமனிதனுக்கு உணவில்லையென்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி பாரதியார். பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா‛ மூலமாக கடந்த 19 மாதங்களில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. கரோனா நோய்க்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதில் 1 ஆண்டில் 150 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டது ஒரு வரலாற்று சாதனையாகும். நாட்டு மக்களின் மருத்துவ தேவைக்காக ரூ.64,000 கோடி மதிப்பில் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத்‛ திட்டம் மூலமாக 80,000 சுகாதார வளாகம் உருவாக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான ஏழைகள் பயன்பெறும் வகையில் மருத்துவ சேவை பெற ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கியதை நான் பாராட்டுகிறேன்.

‘ஜல் ஜீவன் மிஷன்‛ மூலம் 6 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். நமது விவசாயிகள் 30 கோடி மெட்ரிக் டன் உணவு தானியத்தையும், 33 கோடி மெட்ரிக் டன் தோட்டக்கலை பயிர்களையும் உற்பத்தி செய்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்திய அரசு நேரடியாக 433 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை 50 லட்சம் விவசாயிகளிடமிருந்தும், 900 லட்சம் மெட்ரிக் டன் நெல்லினை 1 கோடியே 30 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளதால் நமது நாட்டிலுள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இந்திய ரயில்வே துறை மூலம் 1900 கிசான் ரயில்கள் 150 வழித்தடங்களில் சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் அத்தியாவசிய விளைபொருட்களான காய்கறி, பழங்கள், பால் நாடு முழுவதும் இந்த கரோனா காலகட்டத்தில் கொண்டு சேர்த்துள்ளது வரவேற்க்கத்தக்கது.

’பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி‛ திட்டத்தில் நாடு முழுவதும் 2 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.1,80,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா‛ திட்டத்தின் மூலமாக 2020-2021 ஆண்டு சுமார் 36,500 கி.மீ தூர கிராம சாலைகள் போடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் 2014 ல் இருந்து 90,000 கி.மீ. தூரமாக இருந்த சாலையை தற்போதைய நம்முடைய அரசு தொடர் முயற்சியினால் 1,40,000 கி.மீ தூரமாக விரிவடைந்து உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது.

‘பாரத் மாலா‛ திட்டத்தில் 23 பசுமை தாழ்வாரங்கள் உள்ளடக்கிய பசுமை வழி விரைவு சாலை ரூ.6,00,000 கோடி மதிப்பில் 20,000 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது.

செல்போன் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தொழில்நுட்பத்தில் தலைசிறந்த நாடாக உருவெடுக்க ரூ.76,000 கோடி பி.எல்.ஐ திட்டம் அமலாகி உள்ளது. இதன்மூலமாக செயல்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை மதிப்பீட்டில் உள்நாட்டிலேயே சிலிக்கான் செமி கண்டக்டர்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 மெகா ஜவுளி பூங்காக்கள் ரூ 4500 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளதால் பல லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

மேலும், ஜவுளித்துறையில் உள்நாடு, வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். நம்முடைய இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தும் விதமாக புதிய வந்தே பாரத் ரயில்கள் மற்றும் அதிநவீன விஸ்டாடூம் ரயில் பெட்டிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

கடந்த 7 ஆண்டுகளில் நாட்டின் ரயில்பாதையில் சுமார் 24,000 கி.மீ மின்சாரமயமாக்கப்பட்டுள்ளது. 11 புதிய மெட்ரோ வழிதடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 21 புதிய பசுமை விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்து அரசு கடந்த 2020-2021 ஆண்டில் நாட்டிலுள்ள சுமார் 28 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.65,000 கோடி வங்கிகள் மூலம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. பெண் திருமண வயது 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்படுகிறது. விளையாட்டுத் துறை எடுத்துக் கொண்டால் ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்களையும், பாராலிம்பிக் போட்டியில் 19 பதக்கங்களையும் நம் இந்திய விளையாட்டு வீரர்கள் பெற்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ராணுவத்தை எடுத்துக் கொண்டால் அதன் 209 உதிரிபாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல் உள்நாட்டியிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், 2800 பாதுகாப்பு உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 83 தேஜாஸ் போர் விமானம் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பல்வேறு வேலைவாய்ப்புகளை நமது இளைஞர்களுக்கு பெற்று தரும் என்பது உண்மை. கடந்த ஆண்டிற்கான சரக்கு ஜிஎஸ்டி வசூல் பல மாதங்களில் 1,00,000 கோடி ரூபாயை தாண்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதுபோல, பல்வேறு சாதனைகளை நமது அரசு இன்று படைத்துள்ளதை இந்த குடியரசுக் தலைவர் உரை சுட்டிகாட்டியுள்ளதை நான் அஇஅதிமுக சார்பாக மனப்பூர்வமாக பாராட்டி வரவேற்கிறேன்.

இவ்வளவு சாதனைகளை இந்த அரசு புரிந்துள்ளது. இதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட காங்கிரஸ், திமுக இயக்கங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள், எமர்ஜென்சி காலத்தை மறந்துவிட்டார்கள். தேர்தல் நேரங்களில் பல பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்துவிட்டு பின், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வீண் கதைகளை பேசி மக்களை திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆக, அந்த இயக்கங்கள் தங்கள் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சிக்கு என்ன செய்தது என்பது எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களுடைய பேச்செல்லாம் இந்திய நாட்டின் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. ஆனால், நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையினாலும், செயல் திட்டங்களினாலும் நமது இந்தியா வளர்ச்சியை நோக்கி வெற்றிநடை போடுகிறது.

அதை உணர்த்தும் வகையில் இந்த குடியரசுத் தலைவர் உரை அமைந்து இருக்கிறது. அதற்கு எனது கட்சியின் சார்பில் எனது ஆதரவினை தெரிவித்து விடைபெறுகிறேன்” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x