Published : 02 Feb 2022 10:11 PM
Last Updated : 02 Feb 2022 10:11 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சமூக நீதித்துறை இணை அமைச்சர் நாராயணசுவாமி, "விளிம்புநிலையில் உள்ளதனிநபர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழிலுக்கான ஆதரவை வழங்குவதற்காக ஸ்மைல் எனும் திட்டத்தை சமூக நீதி அமைச்சகம் வகுத்துள்ளது. மூன்றாம் பாலினத்தவரின் விரிவான மறுவாழ்வுக்கான நல உதவி என்பது இதன் துணை திட்டமாக உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ வசதிகள், உதவிகள், மனநல ஆலோசனை, கல்வி, திறன் வளர்ச்சி மற்றும் பொருளாதார இணைப்புகளை வழங்குவது இந்த துணை திட்டத்தின் நோக்கமாகும்.
'கரிமா கிரஹ்' என்ற பெயரிலான 12 தங்குமிடங்களை மூன்றாம் பாலினத்தவர்களுக்காக அமைக்கும் பணியை அமைச்சகம் தொடங்கியுள்ளதோடு இந்த வசதிகளை நிறுவும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு நிதி உதவியையும் வழங்குகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் பீகாரில் இந்த தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன. உணவு, மருத்துவ உதவி மற்றும் இதர அடிப்படை வசதிகளை மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்குவது இந்த இல்லங்களின் நோக்கமாகும்.
மேலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணித்து தடுப்பதற்காக காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்பு மையத்தை அமைக்கவும் ஸ்மைல் திடடம் வழிவகை செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT