Published : 02 Feb 2022 06:22 PM
Last Updated : 02 Feb 2022 06:22 PM
புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், அவரது சித்தப்பாவான ஷிவ்பால்சிங் யாதவ் ஆகியோரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை. நல்லிணக்கம் பேணும் பொருட்டு போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா முடிவு எடுத்துள்ளார்
ஏழு கட்டங்களாக பிப்ரவரி 10 முதல் உ.பி. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பாஜகவிற்கு நேரடி போட்டியாக சமாஜ்வாதி உள்ளது.
உ.பி.யின் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், மெயின்புரியிலுள்ள கர்ஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அகிலேஷ், மக்களவை எம்.பி.யாக தற்போது உள்ளார்.
அகிலேஷை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான எஸ்.பி.சிங் பகேல் போட்டியிடுகிறார். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் தனது வேட்பாளரை இங்கு போட்டியிட வைக்கிறது.
அகிலேஷின் சித்தப்பாவான ஷிவ்பால்சிங் யாதவ், ஜஸ்வந்த்நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி(லோகியா), அகிலேஷ்சிங்கின் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
எனினும், சமாஜ்வாதியின் சின்னத்திலேயே போட்டியுடும் ஷிவ்பாலை எதிர்த்து காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. இதுபோல், நல்லிணக்கம் கருதி சமாஜ்வாதியின் குடும்பத்தினரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாதது முதன்முறை அல்ல. இதற்கு முன் மக்களவை தேர்தல்களிலும் கூட தன் வேட்பாளர்களை போட்டியிட வைக்கவில்லை.
கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து சமாஜ்வாதி போட்டியிட்டிருந்தது. எனினும், அக்கட்சிக்கு கடந்த தேர்தலை விடக் குறைவாக வெறும் ஏழு தொகுதிகள் கிடைத்திருந்தன.
காங்கிரஸுக்கு முன்னதாக, தலித் ஆதரவு புதியக் கட்சியான ராவண் என்கிற சந்திரசேகர் ஆஸாத்தின், ‘ஆஸாத் சமாஜ் கட்சி’யும் அகிலேஷை எதிர்த்து தன் வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என அறிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT