Published : 01 Feb 2022 09:42 PM
Last Updated : 01 Feb 2022 09:42 PM
சென்னை: 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். காங்கிரஸ் இந்தப் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், "வருமான வரி சலுகைகள், ஜி.எஸ்.டி. சலுகைகள் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஏழை மக்கள் இருக்கிறார்கள் என்பதை நிதியமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார். ஏழைகள் என்கிற வார்த்தை பட்ஜெட்டில் இரண்டுமுறை இடம்பெற்றுள்ளது. ஏழைகளை மறக்காமல் இருந்ததுக்கு நன்றி. நிதி அமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கான பட்ஜெட் இது.
மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை வட்டியில்லா கடனுதவி என்பது வரவேற்க தகுந்த திட்டம் என்பதை தவிர, மத்திய பட்ஜெட்டில் வரவேற்புக்குரிய எந்த அம்சங்களும் இல்லை. அதேநேரம், விவசாயம் மற்றும் அதை சார்ந்த அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு என்பது குறைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் இல்லை.
நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. துயரத்தில் உள்ள மக்களை பற்றி ஒருதுளி கூட கவலைப்படாமல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர். மேலும் 25 ஆண்டுகளுக்கு பின் எட்டப்போகும் இலக்கு குறித்து நிதியமைச்சர் கூறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். 25 ஆண்டுகள் இந்த திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வரை மக்கள் காத்திருக்க வேண்டும் போல" என்று ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT