Published : 01 Feb 2022 07:10 PM
Last Updated : 01 Feb 2022 07:10 PM

அமித் ஷா அழைத்தும் செல்லாத ஆர்எல்டி... - உ.பி தேர்தலில் ஜெயந்த் சவுத்ரி முக்கியத்துவம் பெறுவது ஏன்?

முசாபர்நகர்: உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவை வலுப்படுத்தும் பொருட்டு அமித் ஷா நேரடியாக கூட்டணிக்கு அழைப்புவிடுத்த கட்சி ராஷ்டிரீய லோக் தளம் (ஆர்எல்டி). உத்தரப் பிரதேச பாஜக எம்.பி. பல்யான் மூலம் ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரிக்கு தூதும் விடப்பட்டது. ஆனால், அமித் ஷாவின் அழைப்பை நிராகரித்த ஜெயந்த சவுத்ரி, "நீங்கள் என்னை அழைக்க வேண்டாம், உங்களால் வீடு, வாழ்வாதாரம் இழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களை அழைத்துப் பேசுங்கள்" என்று வெளிப்படையாக கூட்டணி அழைப்பை போட்டு உடைத்தார்.

இதோடு அமித் ஷா நிற்கவில்லை. ஜெயந்த் சவுத்ரிக்கு செல்வாக்கு மிகுந்த மேற்கு உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷாவின் பேச்சும் சவுத்ரியை சுற்றியே இருந்தது. "உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சி அமைந்தால் கூட்டணியில் இருந்து ஜெயந்த் சவுத்ரி வெளியேற்றப்படுவார்" என்றார். ஜெயந்த் சவுத்ரியை இதே கூட்டத்தில் ஜெயந்த் பாய் (சகோதரர்) என்று அழைக்கவும் செய்தார். இப்படி ஜெயந்த் சவுத்ரிக்கு அமித் ஷா முக்கியத்துவம் கொடுக்க அவருக்கு மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள செல்வாக்கும் ஒரு காரணம்.

கடந்த சில வருடங்களில் வளர்ந்த இளம் அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜெயந்த் சவுத்ரி. இவரை புதிய தலைமுறை அரசியல்வாதி என்று அங்குள்ள அரசியல் நோக்கர்கள் கூறுவதுண்டு. எனினும், பாரம்பர்யமிக்க அரசியல் குடும்பத்தின் வாரிசு. ஆம், முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் மகன் தான் இந்த ஜெயந்த் சவுத்ரி. வெளிநாட்டில் படித்துவிட்டு தொழிலை கவனித்த வந்த ஜெயந்த், தந்தை அஜித் சிங் இறந்தபின் கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கடந்த ஆண்டுகளில் இந்திய அளவில் முக்கியமான அரசியல் கட்சியாக இயங்கியது ஆர்எல்டி.

இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட, நிலப்பிரபுத்துவம் அதிகம் கொண்ட ஜாட் இன மக்களின் அடையாளமாக விளங்கிய இந்தக் கட்சி 2013 முசாபர்நகர் வன்முறைக்கு பிறகான பாஜகவின் எழுச்சி காரணமாக அந்த மக்களிடமே தனது செல்வாக்கை இழந்தது. குறிப்பாக, கடந்த தேர்தலில் ஜாட் இன மக்கள் பெருவாரியாக பாஜகவுக்கு ஆதரவு அளித்து, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியை தேடிக்கொடுத்தனர். அதேநேரம், ராஷ்ட்ரீய லோக் தளம் 22 இடங்களில் போட்டியிட்டு 10 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. மேலும், ஒரே ஒரு எம்எல்ஏ தொகுதி மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்தது.

தனது அடித்தளத்தை இழந்திருந்த ஆர்எல்டிக்கு சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் மூலம் இன்னொரு வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்தவர்களில் முக்கியமானவர்கள் மேற்கு உத்தரப் பிரதேசத்தை பிரதானமாக கொண்ட ஜாட் சமூக மக்கள். விவசாயப் பின்னணியை கொண்ட இம்மக்கள், கடுமையான போராட்டத்தை வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னெடுத்தனர். இதே போராட்டங்கள் வாயிலாக ஜெயந்த் சவுத்ரி தனது சமூக மக்களிடம் தனது கட்சி இழந்த செல்வாக்கை மீட்டெடுத்தார். விவசாயப் போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்ட ஜெயந்த், தனது கட்சி சார்பாக பல போராட்டங்களை நடத்தினார்.

அதோடு, தான் பங்கேற்கும் கூட்டங்களில் "பாஜகவின் வகுப்புவாத அரசியலை கட்டுப்படுத்துவதில் ஆர்எல்டியின் அரசியல் எழுச்சி முக்கிய பங்குவகிக்கும்" என்று ஜெயந்த் சவுத்ரி முழக்கமிட்டார்.தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் வாயிலாக புதிய உத்வேகத்தில் செயல்பட்ட அவர், இளைஞர்கள் மத்தியில் ஜாட் சமூக மக்களிடமும் பிரபலமடைந்தார். விரைவாக, தனது கட்சியின் ஆஸ்தான செல்வாக்கு மண்டலங்களாக இருந்த மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இப்போது வலுவான தலைவராக உருவெடுத்துள்ளார். அதேநேரம், இதே மேற்கு உத்தரப் பிரதேச பகுதிகளில் இந்தமுறை பாஜக கடுமையான பின்னடைவை சந்திக்கும் என்று பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்துவிட்டபோதிலும், அந்தச் சட்டத்தால் பாஜக மீதான ஜாட் சமூக மக்களின் அதிருப்தி இன்னும் குறையவில்லை என்பதே பின்னடைவுக்கான முக்கிய காரணியாகச் சொல்லப்படுகிறது.

இதை கணித்தே சமீப காலங்களில் ஜாட் சமூக மக்களுக்கு மோடியும், அமித் ஷாவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். "இயல்பிலேயே போராட்ட குணமிக்கவர்கள், ஜாட் மக்கள்" என்று சமீபத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். தொடர்ந்து அமித் ஷா கடந்த முறை உத்தரப் பிரதேசம் வந்தபோது, ஜாட் சமூக பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தையும் பாஜக நடத்தியது. ஆனால், இந்தக் கூட்டத்தில் ஜாட் சமூகத்தின் முக்கியத் தலைவர்கள் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை என்று சொல்லப்பட்டது. இதையடுத்தே ஜாட் சமூக மக்களின் ஒற்றைமுகமாக மாறியிருக்கும் ஜெயந்த் சவுதிரிக்கு நேரடியாக அமித் ஷா அழைப்புவிடுத்தார். ஆனால் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டு, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உடன் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளார் ஜெயந்த் 'பாய்'.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x