Published : 01 Feb 2022 01:08 PM
Last Updated : 01 Feb 2022 01:08 PM
புதுடெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலம் இந்த ஆண்டு நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க, அப்படியென்றால் பிஎஸ்என்எல் நிலை என்னவென்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர்.
நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர், 5G இணையச் சேவையை வழங்கும் வகையில் அலைக்கற்றை ஏலம் நடைபெறும் என்று தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட எதிர்க்கட்சியினர், அப்படியென்றால் பிஎஸ்என்எல் நிலை என்ன? அதற்கு 5ஜி அலைக்கற்றை இல்லையா என முழங்கினர். இதனால் சில விநாடிகள் அவையில் சலசலப்பு நிலவியது.
இந்தியாவில் இதுவரை 5ஜி அலைக்கற்றை தொடர்பான ஏலம் விடப்படவில்லை. இந்நிலையில், 5ஜி அலைக்கற்றையை வழங்க தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
இதற்காக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் அவ்வப்போது 5ஜி அலைக்கற்றை சேவை பரிசோதனைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 5ஜி அலைக்கற்றை செயல்படத் தொடங்கிய உடன், இணைய வேகம் ஏற்கெனவே இருக்கும் இணைப்பின் வேகத்தை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
பார்தி ஏர்டெல், குவால்காம் உடன் இணைந்து 5ஜி அலைக்கற்றையை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜியோ, சொந்தமாகவே 5ஜி அலைக்கற்றைப் பயன்பாட்டை உறுதி செய்துள்ளது. ஆகையால், 5ஜி அலைக்கற்றை ஏலம் இந்த ஆண்டு நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதால் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அண்மையில், அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் ப்ரீபெய்டு ப்ளான் கட்டணத்தில் கணிசமான உயர்வை அறிவித்ததும் இந்த ஏலத்தை எதிர்நோக்கியே என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...