Published : 01 Feb 2022 10:01 AM
Last Updated : 01 Feb 2022 10:01 AM
புதுடெல்லி: பளபள சூட்கேஸ், துணிப்பை, இப்போது டேப்லெட் என பட்ஜெட் உரை தாங்கிய பெட்டகங்கள் உருமாறிய வரலாறு சற்று சுவாரஸ்யமானது.
1947 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே சண்முகம் செட்டி, தோல் பையில் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றம் எடுத்துச் சென்றார். இன்று நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையை டேப்லெட் இயந்திரத்தில் வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து 2022 - 23 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்கிறார்.
ஆண்டாண்டு காலமாக பட்ஜெட் உரை அடங்கிய பெட்டி, பளபளப்பாக உயர்தர தோல் பெட்டியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த மரபை 2019ல் அப்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றினார். அதுதான் அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட். நிர்மலா சீதாராமன், முதல் பட்ஜெட்டிலேயே பட்ஜெட் உரை பெட்டகத்தை மாற்றி கவனம் ஈர்த்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் பட்ஜெட் உரையானது கிளாட்ஸ்டோன் பாக்ஸ் எனப்படும் பெட்டியில் கொண்டுவரப்படும். பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் அடையாளமாக பளபளப்பான சூட்கேஸில் உரையை எடுத்துவருவது காலனி ஆதிக்க முறையை ஏற்றுக்கொள்வதாக இருப்பதாகக் கூறி அந்த முறை மாற்றப்பட்டது.
பிரிட்டிஷ் ஹேங்கோவரில் இருந்து விடுபட்டோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சூட்கேஸை தூக்கிச் செல்வதைவிட சிவப்பு நிற துணிப்பையை தூக்கிச் செல்வது எளிதாக இருப்பதாகக் கூறினார்.
கடந்த ஆண்டு துணிப்பையைக் கைவிட்ட நிர்மலா சீதாராமன் டேப்லெட்டுக்கு மாறினார். பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா கொள்கையை போதித்து வருவதால் பேப்பரை விடுத்து டேப்லெட்டுக்கு மாறியதாகக் கூறினார். மேலும், அந்த டேப்ளட் மேட் இன் இந்தியா என்றும் பெருமையுடன் கூறினார்.
அதேபோல் கடந்த ஆண்டு மத்திய அரசு Union Budget Mobile App மத்திய பட்ஜெட் மொபைல் செயலியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
1947 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே சண்முகம் செட்டி, தோல் பையில் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றம் எடுத்துச் சென்றார். இத்தனை ஆண்டுகளில் அந்த தோல் பை, சூட்கேஸ், துணிப் பை, தற்போது டேப்லெட் என உருமாற்றம் பெற்றுள்ளன.
பட்ஜெட் உரை அடங்கிய பெட்டகங்கள் மாறலாம். ஆனால், பட்ஜெட் சாமான்ய மக்களுக்கு ஏற்றதாக, பொருளாதார மீட்சிக்கு மேலும் மேலும் வித்திடுவதாக இருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வாசிக்க > மத்திய பட்ஜெட் 2022 - முக்கிய அம்சங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT